மீனவர்களின் நலன் கருதி காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்க திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது!: ஓ.பி.எஸ். உறுதி..!!

திருவள்ளூர்: காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுக விரிவாக்க பணிகளை செயல்படுத்த தமிழக அரசு அனுமதிக்காது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்திருக்கிறார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற அதிமுக வேட்பாளர் பலராமனை ஆதரித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று வாகனத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பொன்னேரி மீனவ மக்களின் நலன் கருதி, மீனவ மக்களின் கோரிக்கையை ஏற்று காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகம் எந்த நிலையிலும் விரிவாக்கம் நிரந்தரமாக செய்யப்படாது என்று உறுதி அளித்தார். மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த அரசு அனுமதிக்காது என்றும் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். உடுக்க உடை, உண்ண உணவு, இருக்க இடம் தரும் இதுவே நல்ல ஆட்சி என்றும் 2023க்குள் தமிழகம் முழுவதும கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் தெரிவித்தார். சூழலை பாதிக்கும் அதானி துறைமுக விரிவாக்க திட்டத்தை எதிர்த்து மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மீனவர்களின் எதிர்ப்பை அடுத்து பொன்னேரி தேர்தல் பிரச்சாரத்தில் பன்னீர்செல்வம் இந்த வாக்குறுதியினை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. …

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு