மீண்டும் விடுப்புடன் கூடிய பயண செலவு சலுகை தமிழக அரசு ஊழியர்களுக்கான செலவின கட்டுப்பாடுகள் தளர்வு: அரசாணை வெளியீடு

சென்னை: கொரோனா காலத்தில் அரசு ஊழியர்களுக்கான விடுப்புடன் கூடிய பயண சலுகை, அலுவலக செலவினங்கள் உள்ளிட்ட பல்வேறு செலவினங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:கொரோனா தொற்று காலமான 2020-21 மற்றும் 2021-22 ஆண்டுகளில் மாநிலத்தின் செலவுகளை கட்டுப்படுத்துவதற்காக அரசு சில நடவடிக்கைகளை எடுத்தது. அதன் அடிப்படையில் 2020-21ம் ஆண்டு பட்ஜெட்டில் குறிப்பிட்ட சில ஒதுக்கீடுகள் நிறுத்தப்பட்டன. மேலும், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி வாரியங்கள் மற்றும் இதர பொது அமைப்புகள் ஆகியவற்றின் செலவினங்களில் சிலவற்றுக்கு நிதி வழங்க தடை விதிக்கப்பட்டிருந்தது.அதன் அடிப்படையில், பரிசுகள், பூங்கொத்துகள், சால்வைகள், நினைவு பரிசுகள், மாலைகள் உள்ளிட்ட பொருட்களை வழங்க கூடாது. அலுவல் ஆய்வு கூட்டங்கள் தவிர 20 பேருக்கும் அதிகமானோர் கலந்துகொள்ளும் அலுவலக நிகழ்ச்சிகள், மாநாடுகள், பயிற்சி பட்டறைகள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் அனைத்து அலுவலக மதிய உணவு மற்றும் இரவு உணவு, கலைநிகழ்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த பொருளாதாரம் சார்ந்த நடவடிக்ைககளை முழுவதுமாக நடைமுறைப்படுத்துவது குறித்த விளக்கங்களும் வெளியிடப்பட்டன.மாநிலத்திற்கு ஒன்றிய அரசிடமிருந்து வர வேண்டிய ஜிஎஸ்டி தொகை வராத நிலையிலும், மாநிலத்தின் நிதிநிலை தொடர்ந்து சிக்கலில் உள்ள நிலையிலும் நிர்வாக நலன் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட அரசாணையில் மாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி, அலுவலகங்களுக்கான தற்செயல் செலவுகள் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுகிறது. அலுவலகங்களுக்கு மரச்சாமான்கள் வாங்குவதற்கான கட்டுப்பாடுகளில் பழைய நிலையே தொடர வேண்டும். விளம்பரம் மற்றும் பொருட்காட்சிகளுக்கான செலவினங்கள் உரிய கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுகிறது. தங்கும்வசதி, உணவு  மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கான செலவினங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது.இயந்திரங்கள் வாங்குவதில் ஏற்கனவே இருந்த நிலை தொடரப்பட வேண்டும்.புதிய வாகனங்கள் வாங்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்படுகிறது. பழைய வாகனங்களை மாற்றம் செய்யலாம். பயிற்சிகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறது. அச்சுப் பொருட்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள் வாங்குவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.பயண செலவு மற்றும் தின படிகளுக்கான கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுகிறது. தவிர்க்க முடியாத பயணங்களுக்கான செலவு மட்டும் அனுமதிக்கப்படுகிறது. அதிகாரிகள் மாநிலங்களுக்குள் விமானத்தில் சிக்கன வகுப்பில் செல்லலாம்.வெளி மாநிலங்களுக்கு அதிகாரிகள் விமானங்களில் செல்வதற்கான செலவினங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு தொடர்கிறது. பயணப்படி 25 சதவிகிதம் குறைக்கப்பட்டது ரத்து செய்யப்படுகிறது. பணியிட மாற்றத்திற்கான செலவினம் குறைக்கப்பட்டது தொடர்கிறது. விடுப்புடன் கூடிய பயண சலுகை மீண்டும் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சிகளில் பரிசு பொருட்கள், சால்வைகள், நினைவு பரிசுகள் கொடுப்பது, மாநாடுகள் நடத்துவது, அலுவலக ரீதியான நிகழ்ச்சிகளில் மதிய உணவு, இரவு உணவு ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்படுகின்றன. இந்த செலவினங்களை இந்த நிதியாண்டு முதல் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது….

Related posts

சொத்து தகராறில் பெண் தற்கொலை

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு