மீண்டும் தர்மயுத்தமா? ஜெயலலிதா நினைவிடம் செல்லும் ஓபிஎஸ் : ‘ஓபிஎஸ் வாழ்க’,’எடப்பாடியே துரோகத்தை நிறுத்து’ என தொண்டர்கள் முழக்கம்!!

சென்னை : அதிமுக பொதுக்குழு நாளை சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெறுகிறது. அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதை தடுக்க ஓ.பன்னீர்செல்வம் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்துள்ளார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஓபிஎஸ்சுக்கு ஆதரவு தெரிவித்த 6 மாவட்ட செயலாளர்கள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஓ பன்னீர் செல்வம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை அடுத்து ஜெயலலிதா நினைவிடத்தில் பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் திரண்டு முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். ஜெயலலிதா நினைவிடத்தில் 100க்கும் மேற்பட்டோர் அமர்ந்து ‘ஓபிஎஸ் வாழ்க’ என முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.ஒற்றைத் தலைமை கோரிக்கையை கைவிடும் வரை போராடுவோம் என ஆதரவாளர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.’ஜெயலலிதா வகித்த பொதுச் செயலாளர் பதவியை யாருக்கும் வழங்கக்கூடாது’, ‘எடப்பாடியே துரோகத்தை நிறுத்து’ உள்ளிட்ட கோஷங்களையும் தொண்டர்கள் எழுப்பி வருகின்றனர்.முன்னதாக இன்று காலை மாபெரும் மக்கள் இயக்கமான அதிமுகவில் தற்போது அராஜகம் மற்றும் சர்வாதிகாரப் போக்கு நிலவுகிறது என்றும் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தர்மம் மறுபடியும் வெல்லும் என்றும் ஓ பன்னீர் செல்வம் ட்வீட் செய்து இருந்தார். இந்த சூழ்நிலையில், பன்னீர் செல்வம் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்வதால் மீண்டும் தர்மயுத்தம் நடத்த திட்டமிட்டு இருக்கிறாரா என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது….

Related posts

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்

டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சொல்லிட்டாங்க…