Sunday, July 7, 2024
Home » மீண்டும் சந்திப்போம்

மீண்டும் சந்திப்போம்

by kannappan

அவனைச் சந்தித்து ஆறு வருடங்கள் இருக்கும். அவன் முகுந்தன். இன்று  வளர்ந்து வரும் பேசப்படுகின்ற திரைப்பட ஒளிப்பதிவாளர். அவளும், அவனும் கல்லூரி முதல் வருடத்தில் இருந்தே நெருங்கிய என்ற சொல்லுக்குப் சொந்தமான நண்பர்கள். கல்லூரியே அவர்கள் நட்பைக் காதலாகப் பார்த்தபோது மறுத்தார்கள். ஆனால், கடைசி வருடம் முடியும் போது முகுந்த் வேறு சொன்னான். அவளைக் காதலிப்பதாக, திருமணம் பண்ணிக் கொள்ள விரும்புவதாக.‘‘இல்லடா… எனக்கு அந்த மாதிரியெல்லாம் தோணல. மேல படிக்கப் போறேன்…’’‘‘சரி… வெயிட் பண்றேன்…’’அப்புறம் அவன் மேல் படிப்புப் படிக்க லண்டன் புறப்பட்டுப் போனான். இவளும் ஒரு பிரபல கம்பெனியில் ஹெச்.ஆர். போஸ்டில் இருந்து கொண்டே கவிதை, கதைகள் எழுதிக் கொண்டிருந்தாள். எப்போதும் நல்ல நண்பர்களாக வாட்ஸ்அப்பில் நலம் விசாரித்துக் கொண்டிருந்தனர். இரண்டு வருடங்களுக்கு முன்பு மீண்டும் ‘‘எங்க வீட்டுல  கல்யாணத்துக்கு ரொம்ப வற்புறுத்துறாங்க. அப்பாவுக்கும் ஒடம்பு சரியில்ல. நீ என்ன‌சொல்ற..?’’ என்று கேட்டான்.‘‘அதே பதில்தாண்டா. எப்பவும் நா உனக்கு நல்ல ஃப்ரண்ட்தான்…’’‘‘ஓகே…’’ என்று ஒரு வரியில் பதில் சொன்னவன் அடுத்து அனுப்பியது அவன் திருமண பத்திரிக்கையை. லண்டனில் இருந்ததால் நேரில் கொடுக்க முடியாமைக்கு வருத்தம் தெரிவித்து வாட்ஸ்அப்பில் வந்தது. போனாள். ஆடம்பரமாக நடந்தது. காவ்யா அழகாகவே இருந்தாள். அவள் கழுத்தில் முகுந்த் தாலி கட்டிய போதுதான் இவள் ஒரு நூதனமான உணர்வை அனுபவித்தாள். ஓடிப்போய் காவ்யாவை அகற்றிவிட்டு, தான், தாலிக் கட்டிக் கொள்ளலாம் போல் தவித்துப் போனாள்.அதற்கப்புறம் கொஞ்ச நஞ்சம் இருந்த கல்யாண ஆசையும் அற்றுப் போய்விட்டது. முகுந்தனுடன் எப்பவாவது  நலம் விசாரிப்போடு சரி. லண்டலிருந்து திரும்பி வந்த இரு வருடங்களில் திரைப்படங்களில்  பெயர் பெற்ற ஒளிப்பதிவாளராகி விட்டான். அவளின் கவிதைகளைப் படித்தவர்கள் ‘புத்தகமாகப் போடுங்களேன்…’ என்றார்கள். ஏற்றுக் கொண்டு நூலாக்கினாள். சொன்னவர்களே நூல் வெளியீட்டு விழா வைத்தால், இன்னும் எழுத்துலகம் கொண்டாடும் எனவும், பேச்சு வாக்கில் அவர்கள் அறிந்திருந்த முகுந்த் நட்பு, அவனையே தலைமை ஏற்க வற்புறுத்தியது.ரொம்ப நாள் கழித்து முகுந்தனை அலைபேசியில் தொடர்பு கொண்டாள். நலம் விசாரித்தவனிடம் விஷயத்தைச் சொல்லாமல் ‘‘வீட்டுக்கு வருகிறேன்…’’ எனவும் எதற்காக என்று கேட்காமல் விலாசம் அனுப்பி காலை சரியாகப் பத்து மணிக்கு வரச் சொன்னான். இனம் புரியாத சந்தோஷம் சுற்றிக் கொள்ள என்ன உடை உடுத்தலாம் என்று துழாவியபோது அந்த சந்தனக்கலர் சல்வார் கண்ணில் பட்டது. அதையே உடுத்தினாள்.ஸ்கூட்டியில் போய் , அந்த பிங்க் நிற பெயின்ட் அடித்திருந்த பெரிய வீட்டின் முன் நிறுத்தினாள். அலைபேசி மணி ஒன்பது ஐம்பத்தி ஐந்து என்றது. உள்ளே போகலாமா? வாட்ஸ் அப் மெசேஜ் ஒலி எழுப்பியது. முகுந்த்தான். ‘நீ வந்து நிற்பது காமெராவுல தெரியுது. உள்ள வா…’இவள் போய் அழைப்பு மணி அடிக்கும் முன்பே கதவு திறந்தது.‘‘வாங்க…’’ என்றாள் காவ்யா. உள்திரும்பி பக்கவாட்டில் திறந்திருந்த கதவிடம், ‘‘வந்துட்டாங்க… அனுப்பவா…’’ என்றாள்.‘‘வரச் சொல்லு…’’ என்றது முகுந்தின் குரல். என்னென்று தெரியாத ஏமாற்றத்துடன் கதவை லேசாகக் தட்டவே ‘‘கம்மின்…’’ என்றான். உள் நுழைந்தவள் பிரமித்தாள். உறுத்தாத பச்சை நிறத்தில் பளபளத்தது அறை. ஒரு பக்க சுவரே தெரியாதபடி, மிகப் பிரமாண்டமான புத்தக அலமாரி. படிப்பது அவனுக்கு மிகவும் பிடிக்கும் என்பது அவளறிந்ததுதான். அப்போதுதான் ஒன்று உறுத்தியது. எங்கேயும் அவனுக்குப் பிடித்த சந்தன நிறத்தைக் காணவில்லை.கண்ணின் வட்டக் கண்ணாடி அறிவையும் , கம்பீரத்தையம் கூட்டிக் காட்ட, உட்கார்ந்திருந்த நிலையிலும் லேசாகத் தொந்தி தெரிந்தது. நெற்றியில் சந்தனக்கீற்று. கையில் ஏதோ பேப்பரை வைத்திருந்தவன் இவளைப் பார்த்தவுடன் எழுந்திருக்காமலேயே புன்னகைத்தானா இல்லை உதடுகளை விரித்தானா..?‘‘நல்லாருக்கீங்களா..?’’ என்றான்.‘‘ம்… நல்லாருக்கேன். நீ… நீங்க..?’’ என்பதற்குள் மீண்டும் கதவு திறந்து மீண்டும் உள் நுழைந்த காவ்யாவின் கையில் ஜூஸ் இருந்தது. ‘‘எடுத்துக்கங்க…’’ என்றவளிடம் இவள் வாங்கிப் போயிருந்த பழக்கவரை நீட்டவே நன்றி சொன்னாள்.‘‘இவங்க அபர்ணா. என்னோட காலேஜ் மேட்…’’புன்னகைத்தாள். மேல் விபரங்கள் எதையும் கேட்காமல் கதவுக்குப் பின்னால் மறைந்தாள்.‘‘நிறைய எழுதுறீங்க போல..?’’ முகுந்த் கேட்டான்.‘‘அது விஷயமாத்தான் உங்களைப் பாக்க வந்தேன். இதுவரைக்கும் நா எழுதுன கவிதைங்கள புத்தகமாப் போட்டிருக்கேன். அத நீங்க லாஞ்ச் பண்ணீங்கன்னா…’’‘‘ஐயோ… இல்லைங்க. எனக்குத் தொடர்ந்து ஷூட்டிங் இருக்கு. வீட்லயும் வொய்ஃப கவனிக்கணும். வேணும்னா இத்தன தூரம் என்ன பாக்க வந்ததுக்கு, கொடுத்திட்டுப் போங்க. வாழ்த்துரை வேணா எழுதி வாட்ஸ்அப்புல அனுப்பறேன்… விழா அன்னைக்கு மேடைல படிச்சுக்குங்க…’’உள்ளுக்குள் ஏதோ உடைந்தது.சட்டென்று எழுந்து நின்றான். அப்போதுதான் கவனித்தாள். அவன் பின்னால் இருந்த இலை வடிவக் கடிகாரம் மணி பத்தரையைக் காண்பித்தது. அவள் பார்ப்பதை அறிந்தவன் அங்கிருந்த பெல்லை அழுத்தவே, காவ்யா தலை தெரிந்தது.‘‘வர்றேங்க…’’ என்றபடி அவளின் தலையாட்டலை பதிலாகப் பெற்றுக் கொண்டு மீண்டும் முகுந்தைப் பார்க்கத் திரும்பினாள். அதற்குள் கதவு சாத்தப்பட்டிருந்தது. வெளியே வந்து ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தவளின் உள்ளே ஏதோ அடைத்தது. உள் மனதில் ‘கல்யாணம் பண்ணிக்கயேன்…’ என உறவினர்களின் குரல் ஒலித்தது.   …

You may also like

Leave a Comment

five × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi