மீண்டும் கொளுத்தும் வெயிலால் பொதுமக்கள் அவதி வேலூரில் 100.9 டிகிரி பதிவு கோடையை போல்

வேலூர், ஆக.4: வேலூரில் கோடையைபோல் நேற்று 100.9 டிகிரியாக வெயில் பதிவானதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். தமிழகத்தில் இந்தாண்டு கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக மார்ச், ஏப்ரல், மே மாதம் வரை தான் வெயிலின் தாக்கம் இருக்கும். ஆனால் தற்போது கோடை காலம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் கோடைக்காலத்தின் தொடக்க முதலே வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. அதன்படி இந்தாண்டு வேலூர் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரமான கடந்த மே 4ம் தேதி முதல் 28ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் அதிக பட்சமாக 107 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது.

இந்நிலையில் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் அவ்வப்போது மழையும் செய்தது. அக்னி நட்சத்திர காலம் நிறைவடைந்த பிறகு வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் அக்னி நட்சத்திர காலக்கட்டத்தில் கொளுத்தியதை போன்று வெயில் கொளுத்தியது. வேலூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால், வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் சற்றே நிம்மதி அடைந்தனர்.

இதற்கிடையில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. கடந்த 31ம் தேதி 100.4 டிகிரியாக வெயில் கொளுத்தியது. தொடர்ந்து நேற்று 100.9 டிகிரி வெயில் கொளுத்தி 2வது நாளாக சதம் அடித்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். ஆகஸட் மாதம் வெயில் கொளுத்துவது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வெயில் தாக்கத்தின் காரணமாக பகல் நேரத்தில் இருசக்கர வாகனங்களில் வெளியே சென்றவர்களும், நடந்து சென்றவர்களும் அனல் காற்றினால் மிகவும் அவதிக்குள்ளாகினர். மேலும் தலை மற்றும் முகத்தை துணியால் மூடிக்கொண்டும், குடைபிடித்தவாறும் சென்றனர். வெயிலின் தாக்கம் காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டம் வழக்கத்தை விட குறைவாகவே காணப்பட்டது.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்