மீட்கப்பட்ட ரூ.500 கோடி மரகத லிங்கத்தை திருக்குவளை கோயிலுக்கு திரும்ப வழங்க வேண்டும்; தருமபுரம் ஆதீனம் கோரிக்கை

தஞ்சை: தஞ்சை அருளானந்த நகர் 7வது குறுக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டில் தொன்மையான கோயில் சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதனையடுத்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு டிஎஸ்பி சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் முருகேசன், எஸ்ஐக்கள் தமிழ்ச்செல்வன், பாலசந்தர் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் நேற்று முன்தினம் தஞ்சைக்கு வந்தனர். பின்னர் அவர்கள், தஞ்சை அருளானந்த நகர் பகுதியில் உள்ள அந்த வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் இருந்த சாமியப்பன் என்பவரின் மகன் அருணபாஸ்கரிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர், தனது தந்தை சாமியப்பன் வசம் பழமையான பச்சை மரகத லிங்கம் ஒன்று இருப்பதாகவும், அதை தற்சமயம் வங்கி லாக்கரில் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். அந்த சிலை உங்களது தந்தையிடம் எப்படி? யார் மூலம் எப்பொழுது வந்தது? என்பது குறித்து போலீசார் கேட்ட போது, அது தொடர்பாக எவ்வித ஆவணங்களும் தங்களிடம் இல்லை என்று அவர் தெரிவித்தார். பின்னர் அந்த பழமையான பச்சை மரகத லிங்கத்தை விசாரணையின் பொருட்டு ஆஜர்படுத்துமாறு போலீசார் கேட்டனர். உடனே வங்கி லாக்கரில் வைக்கப்பட்டு இருந்த பச்சை மரகத லிங்கத்தை அருணபாஸ்கர் எடுத்து வந்து போலீசாரிடம் ஒப்படைத்தார். சோழர்கள் கம்போடியாவிற்கு போருக்கு சென்றபோது, அங்கிருந்து இந்த பச்சை மரகத லிங்கத்தை எடுத்து வந்துள்ளனர். இதன் மதிப்பு ரூ.500 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த மரகதலிங்கம் ஏதேனும் கோயிலுக்கு சொந்தமானதாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் சாட்சிகள் முன்னிலையில் மரகதலிங்கத்தை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் கொடுத்த தனி அறிக்கையின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த சிலை ஏதேனும் கோயிலுக்கு சொந்தமானதா? என்பது குறித்தும், இதன் தொன்மை தன்மை குறித்தும் பூர்வாங்க விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்தநிலையில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை நேற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சந்தித்து சிலை பற்றிய விவரங்களை கேட்டறிந்தனர். அப்போது ஆதினம் கூறியதாவது: கடந்த 2016ம் ஆண்டு நாகை மாவட்டம் திருக்குவளை கோளிலிநாதர் கோயிலில் வைத்து பூஜிக்கப்பட்ட  மரகதலிங்கம் திருடப்பட்டது. பழைமை வாய்ந்த இந்த லிங்கம் அவனிவிடங்கர் என்று அழைக்கப்படுகிறது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருக்குவளை ஆலயத்தில் இருந்து திருடப்பட்ட இந்த லிங்கத்தை மீண்டும் திருக்குவளை ஆலயத்திற்கு வழங்க வேண்டும் என்றார். அப்போது போலீசார் மீட்டுக்கொண்டு வந்திருந்த மரகத லிங்கத்தின் புகைப்படத்தை, தருமபுரம் ஆதீன மடத்துக்கு சொந்தமான கோளிலிநாதர் கோயிலில் தொலைந்து போன மரகத லிங்கத்தின் படத்துடன் ஒப்பிட்டு பார்த்தனர். அதில், இரண்டும் ஒன்றாக இருந்தது. இதுகுறித்து முதல்வரிடம் தெரிவித்து விரைவில் சிலைகளை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறிச் சென்றனர்….

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன செயற்கை கருவிகள்: கலெக்டர் வழங்கினார்