மிளகாய்க்கு விலை இருந்தும் விளைச்சல் இல்லை-கவலையில் விவசாயிகள்

சாயல்குடி :  மார்க்கெட்டில் மிளகாய்க்கு விலை இருந்தும் முதுகுளத்தூர், கமுதி, சாயல்குடி பகுதியில் குறைவாக விளைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். முதுகுளத்தூர் வட்டாரத்தில் காக்கூர், புளியங்குடி, மகிண்டி, கீழத்தூவல் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள். சாயல்குடி அருகே கொண்டுநல்லான்பட்டி, டி.எம்.கோட்டை, வி.சேதுராஜபுரம், உச்சிநத்தம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள்.கமுதி பகுதியில் கள்ளிக்குளம், நெறிஞ்சிப்பட்டி, கோவிலாங்குளம், புதுக்கோட்டை, செங்கப்படை, தோப்படைப்பட்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவாரி பயிராக சுமார் 50ஆயிரம் ஏக்கரில் நாட்டு மிளகாய் பயிரான குச்சிமிளகாய், (குண்டு)முண்டு மிளகாய் பயிர்கள் பயிரிடப்பட்டது. 6 மாத பயிரான நாட்டு மிளகாய், கடந்த அக்டோபர் மாதத்தில் செடியாக நடப்பட்டது. அப்போது நீடித்த தொடர் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் மூன்று பகுதிகளிலும் சுமார் ஆயிரம் ஏக்கர் மிளகாய் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானது. இந்நிலையில் மற்ற இடங்களில் ஓரளவிற்கு மிளகாய் வளர்ந்து வந்தது. இதனை கண்மாய் தண்ணீர், போர்வெல் தண்ணீரை பாய்ச்சி ஆர்வத்துடன் பராமரித்து வந்தனர். இதற்கிடையே நன்றாக விளைந்துள்ள மிளகாய் பழத்தை விவசாயிகள் தற்போது பறித்து வருகின்றனர். வெளிமார்க்கெட்டில் விலை இருந்தும், போதிய விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து  டி.எம்.கோட்டை விவசாயிகள் கூறும்போது, இந்தாண்டு மழையால் மிளகாய் விவசாயம் பாதிக்கப்பட்டது.இருந்த போதிலும் இரண்டாம் கட்டமாக செடிகளை நட்டு பராமரித்து வந்தோம். ஆனால் பருவம் தவறிய மழை, பூச்சி தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் பாதிப்புக்குள்ளானது. தற்போது மகசூல் நிலையை எட்டிய நாட்டு மிளகாய் பழம் பறிக்கப்பட்டு வருகிறது. வியாபாரிகள் ரகம், தரத்திற்கு ஏற்ப கிலோ ஒன்றிற்கு ரூ.350 முதல் 450க்கு வரை வாங்குகின்றனர். போதிய விலை இருந்தும், போதிய விளைச்சல் இல்லாதது கவலையளிக்கிறது என்றனர். ஊக்குவிக்க வேண்டும்இப்பகுதியில் விளைவிக்கப்படும் பாரம்பரியமான நாட்டு மிளகாய் வகையை சேர்ந்த குச்சி மிளகாய் காரத்தன்மை குறைந்து காணப்படுவதாலும், குண்டு மிளகாய் காரத்தன்மை அதிகமாகவும் இருப்பதால் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் இந்த மிளகாய் ரகத்தை ராமநாதபுரம் முண்டு என அழைக்கப்படுகிறது. எனவே இந்த மிளகாய் பயிர் விவசாயத்திற்கு மானிய திட்டங்கள் அறிவித்து ஊக்குவிக்க வேண்டும். கிராமங்கள் தோறும் உலர்களம் மற்றும் சூரிய ஒளி உலர் கூடம் அமைத்து தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

பொதுமாறுதல் கலந்தாய்வு: 3,000 ஆசிரியர்கள் இடமாற்றம்

திருவள்ளூர் அருகே 100 நாட்கள் பணி தரக் கோரி பெண்கள் சாலை மறியல்

சென்னையில் செல்லப்பிராணி வளர்ப்போர் அடுத்த மூன்று மாதத்திற்குள் ஆன்லைன் உரிமம் பெற மாநகராட்சி உத்தரவு