மின் வேலியில் சிக்கி காட்டு யானை பலி: விவசாயி கைது

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. தாளவாடி மலைப்பகுதியில் உள்ள ஜீரகள்ளி வனச்சரகம், மல்லன்குழி வனப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ஒரே பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 9ம் தேதி மல்லன்குழி கிராமத்தில் விவசாயி மாதேவா என்பவரது விவசாய தோட்டத்திற்கு அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் பள்ளத்தின் அருகே ஒரு காட்டு யானை இறந்து கிடப்பதை அப்பகுதி விவசாயிகள் பார்த்தனர்.இதுகுறித்து உடனடியாக ஜீரகள்ளி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், யானை உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், இறந்தது சுமார் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பது தெரிய வந்தது.பெண் யானை உடல்நலக்குறைவால் இருந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பதை கண்டறிய வனத்துறை கால்நடை மருத்துவர் மூலம் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இதில், யானை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது தெரிய வந்தது.இதைத்தொடர்ந்து, வனத்துறையினர் விசாரணை நடத்தியதில் அருகே உள்ள விவசாய நிலத்தின் உரிமையாளர் மாதேவா அவரது தோட்டத்தில் வனவிலங்குகள் புகாமல் இருக்க அமைத்திருந்த மின்வேலியில் உயர் அழுத்தம் மின்சாரம் பாய்ச்சியதும், காட்டு யானை அந்த மின் வேலியில் சிக்கி அடிபட்டு பின்னர் தள்ளாடி நடந்து வந்து பள்ளத்தில் விழுந்து இறந்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து ஜீரகள்ளி வனத்துறையினர் விவசாயி மாதேவனை கைது செய்து விசாரிக்கின்றனர்….

Related posts

மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்

பேரனுக்கு பதிலாக நடந்த மூதாட்டி கொலை வழக்கில் உறவுக்கார பெண் சிக்கினார்

இளம்பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி ஊர், ஊராக அழைத்துச் சென்று சித்ரவதை: ஜம்முவில் வாலிபர் கைது