மின்னல்வேக பதவி உயர்வு உத்தரவுகளால் மகிழ்ச்சியில் இருக்கும் அதிகாரிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘இலை கட்சியில் நிழலுக்காக நிஜம் நடத்திய யுத்தத்தை பற்றிச் சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘மாஜி மில்க் மந்திரி அதியமான் கோட்டை  மாவட்டத்தில்  பதுங்கியிருப்பதாக மெசேஜ் கிடைக்க, விருதுநகர் தனிப்படை விசாரணை பண்ணிச்சாம். இதுல, உள்ளூர் மாஜியின் பிஏவையும்,  டிரைவரையும் கூட்டிட்டு  போயிட்டாங்க. இதை கண்டிச்சு உள்ளூர் மாஜி உடனடியாக  இலை ெதாண்டர்களை அழைத்து ஆர்ப்பாட்டம் நடத்த சொன்னாராம். தன் பிஏவுக்காக யாராவது ஒரு ஆர்ப்பாட்டம் நடத்துவாங்களா… அதுவும் மினிஸ்டராக இருந்தவரு என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒரு இலை தொண்டரு, நிர்வாகியை பார்த்து கேட்டாராம். அப்பாவியாக இருக்கியே… பிஏவுக்காக இந்த ஆர்ப்பாட்டம் நடக்கல… தன் நிழல் தன் நிஜமுகத்தை காக்கிகளிடம் கக்கிவிடாமல் இருக்க தான் இந்த டிராமா ஆர்ப்பாட்டம். அதுக்கு காரணம், உள்ளூர் மாஜியின் பி.ஏ.,வாக இருப்பவரு  கட்சியில் மட்டுமல்ல, மாவட்ட  கோ-ஆபரேட்டிவிலும் முக்கிய பொறுப்பில்  இருக்கார். உள்ளூர் மாஜியின்  நிழலாக வலம் வந்த இவருக்கு, அவரது கணக்கு  வழக்குகள், அன்டர்கிரவுண்ட்  விஷயங்கள் எல்லாம் அத்துப்படியாம்.  சிட்டிக்குள்ள மாஜியை விட பிரமாண்ட  பங்களாவை சமீபத்தில் கட்டினவரு.  அப்படிப்பட்டவரை என்கொயரிங்கிற பெயர்ல  துளைச்செடுத்தால், வேறு ஏதாவது  குட்டு அம்பலமாகி விடுமோ என்பது மாஜியின்  கணக்காம். இதுதான் போடுங்க ஒரு  ஆர்ப்பாட்டத்தை என்று நடத்தி  நான் உன் பக்கம் இருக்கேன்… அடிச்சு கேட்டா கூட சொல்லிடாதே… வெளியே வந்ததும் அதற்கும் சேர்த்து கவனித்துவிடுகிறேன்னு மறைமுகமாக கொடுத்த சிக்னல்தான் இந்த ஆர்ப்பாட்டமாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பழம்னால பிரச்னை என்று சினிமாவிலும் அரசியலிலும் கேள்விப்பட்டு இருக்கேன்… இப்போது பழம் பண்ற பிரச்னை என்ன…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘விழு  என்று தொடங்கும் மாவட்டத்தில் பழம் கட்சியில் சமீபத்தில், 3 மாவட்ட   செயலாளர் பதவிக்கு ஆட்களை போட்டாங்களாம். அதில், விழுப்புரம், திருக்கோவிலூர்  தொகுதியை  உள்ளடக்கி ஒருவருக்கு மாவட்ட செயலாளர் பதவி போடப்பட்டதாம்.  கள்ளக்குறிச்சி  மாவட்டத்தைச் சேர்ந்த அவர், விழு மாவட்டத்துக்கு செயலாளராக போடப்பட்டதால்  அதன் கட்சி நிர்வாகிகள் கொந்தளிப்பில்  இருக்கிறார்களாம். கட்சியில், இங்கு  ஆட்கள் இல்லாததை போல் பக்கத்து  மாவட்டத்தைச் சேர்ந்தவருக்கு பதவி கொடுத்து  இருக்கிறார்கள் என்று கொந்தளிப்பில் இருக்காங்களாம்… வரட்டும் உள்ளாட்சி தேர்தலில் ஒருவர் கூட ஜெயிக்க முடியாமல் கீழே விழுந்து மண்ணை கவ்வச் செய்கிறோம் என்று ரகசியமாக பேசி வர்றாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘மஞ்சள் மாவட்டத்தில் இலை கட்சியில் கோஷ்டி பூசல் உச்சகட்டத்தில் இருக்காமே, அப்டியா..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஆமா.. இந்த மாவட்டத்தில் இலைக்கட்சி பலமாக காலூன்றி  இருக்கிறது  என மார்தட்டியது அந்தக்காலம். தற்போது, இக்கட்சியில் கோஷ்டி  பூசல்  நாளுக்கு நாள் வலுக்கிறது. இம்மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்ற   உறுப்பினருக்கு எதிராக இலைக்கட்சியினர் கொடி தூக்கியுள்ளனர். புது எம்எல்ஏ.வான அவர், இதே பகுதியில், கடந்த காலங்களில் நடந்த உள்ளாட்சி மன்ற   தேர்தலின்போது, இலையை எதிர்த்து,   சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவராம். தாய் கட்சியை எதிர்த்து   நின்ற இவர், இம்முறை சட்டமன்ற தேர்தலில் சீட் வாங்கி, வெற்றியும்   பெற்றுவிட்டார். கட்சிக்கு எதிராக செயல்பட்டவருக்கு எப்படி எம்எல்ஏ   வாய்ப்பு கொடுக்கலாம் என இலைக்கட்சியினர் வரிந்து கட்டுகின்றனர். இதற்கு அப்புறம் இலை கட்சி மக்கள் பிரதிநிதி செய்ததுதான் கோஷ்டி பூசலுக்கு காரணமாம். இவர்   மட்டுமின்றி, இவரது குடும்பத்தினர் அனைவரையும் கட்சிக்குள் இழுந்து,   பல்வேறு பதவிகளை பெற்றுக்கொடுத்துள்ளாராம். மனைவிக்கு   கட்சிப்பதவி, தம்பிகள் இருவருக்கு மாவட்ட பதவி, மச்சானுக்கு ஒன்றிய   செயலாளர் பதவி, மைத்துனருக்கு ஒன்றிய பொருளாளர் பதவி, தங்கைக்கு ஒன்றிய   மகளிர் அணி பதவி, சித்தப்பாவுக்கு எம்ஜிஆர் மன்ற பதவி, பங்காளிகளுக்கு   முக்கிய பதவி, ரியல் எஸ்டேட் பார்ட்னர்களுக்கு மாவட்ட பதவி, ஒன்றிய பதவி என   மிகவும் தாராளம் காட்டியுள்ளார். இது, கட்சிக்காக உண்மையாக உழைக்கும்   தொண்டர்கள் பலருக்கு மனக்கசப்பை உருவாக்கியுள்ளது. இப்பகுதியில் உள்ள ஒரு நபர், மேற்கண்ட விவரங்களை எல்லாம் குறிப்பிட்டு, துண்டு நோட்டீஸ் அச்சடித்து,   மாவட்டம் முழுக்க விநியோகம் செய்து வருகிறார். கட்சியின் மேலிடத்துக்கும்   அனுப்பியுள்ளார். இந்த விவகாரம், மஞ்சள் மாவட்ட இலைக்கட்சியில் பெரும்   பூகம்பத்தை கிளப்பியுள்ளது’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஐபிஎஸ் அதிகாரிகள் மகிழ்ச்சிக்கு காரணம் என்ன..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘தமிழக அரசில் பதவி உயர்வுன்னா, ஆண்டு தொடக்கத்தில்தான் வழங்கப்படும். கடந்த சில ஆண்டுகளாக பதவி உயர்வு பட்டியல் ரெடி ஆனாலும், அதிகாரிகள் வேண்டும் என்றே காலதாமதம் செய்வார்கள். ஆளும் விஐபிக்களும் கையெழுத்துப் போட தாமதம் செய்வார்கள். இதனால் ஆண்டுக் கடைசியில்தான் பதவி உயர்வு வழங்கப்படும். ஆனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பதவி உயர்வு உடனடியாக அதுவும் காலதாமதம் இல்லாமல் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதனால் புத்தாண்டு அன்று ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியதால் அவர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார்களாம்’’ என்றார் விக்கியானந்தா….

Related posts

கட்சி கண்டுகொள்ளாததால் அதிருப்தி கோஷ்டியிடம் ஐக்கியமான இலை பிரமுகரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

இடைத்தேர்தலை புறக்கணித்து குற்றாலத்துக்கு கிளம்பிய குக்கர் பார்ட்டிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கதர் சட்டைக்காரரை தூக்க இலைக்கட்சி தலைவர் விரிக்கும் வலை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா