Sunday, September 29, 2024
Home » மின்நுகர்வோர் தங்களது புகார்களை இணைய வழியில் பதிவு செய்யும் புதிய திட்டம்

மின்நுகர்வோர் தங்களது புகார்களை இணைய வழியில் பதிவு செய்யும் புதிய திட்டம்

by kannappan

* மின்வாரியத்தில் விரைவில் அமலாகிறது* வரைபடம் மூலம் இருப்பிடம் தெரிவு செய்யலாம்* 2.88 கோடி பேரின் தகவல்கள் சேகரிப்புசென்னை: தமிழக மின்சார வாரியம், மின்நுகர்வோரின் புகார்கள் இணைய வழியில் பதிவு செய்யும் புதிய வசதி கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 10,000 மின்னூட்டிகள், 3.60 லட்சம் மின் மாற்றிகள், மற்றும் 2.88 கோடி  மின் நுகர்வோரின் புவியியல் தகவல்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்  பகிர்மானக்கழகத்தில் கணினி சார்ந்த புவியியல் தகவல் அமைப்பில்  பதியப்பட்டுள்ளது. திமுக அரசு பதவி ஏற்ற பிறகு அரசு துறைகளில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக அனைத்து துறைகளையும் கணினி மயமாக்கவும், பொதுமக்களின் தங்களது குறைகளுக்கு விரைவில் தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் குறைகளை களையவும் அவற்றுக்கு உடனடியாக தீர்வு காணவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னுரிமை கொடுத்து வருகிறார். அவரே பல இடங்களில் புகார்களை வாங்குகிறார். முதல்வர் தனிப்பிரிவுக்கும் அடிக்கடி சென்று பார்வையிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறார். அவரது உத்தரவுப்படி மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மின்துறையை புத்தாக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து மின்வாரிய சேர்மன் ராஜேஷ் லகானி, தலைமையில் தினமும் பிரிவு வாரியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு கடந்த 10 ஆண்டுகளில் மின் துறையில் செய்யப்பட்டுள்ள முறைகேடுகளை கண்டறிவது மட்டுமல்லாமல், அவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டதால் ஏற்படும் மின் இழப்புகளை சரி செய்யவும், பொதுமக்களின் குறைகளை தீர்க்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.அதன்படி, மின்பகிர்மான கழகத்தின் தகவல் தொழில் நுட்பப்பிரிவு, மின் நுகர்வோர்களின் வசதி மற்றும் மேம்பாட்டினை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஏற்கனவே தாழ்வழுத்த மற்றும் உயர்வழுத்த புதிய இணைப்புகளுக்கான விண்ணப்பங்கள், குறைந்த மின்பளு மற்றும் அதிக மின்பளுவிற்கான விண்ணப்பங்கள், தற்காலிக மின் இணைப்புக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பெறப்படும் நிலையில் சமீபத்தில் பெயர் மாற்றத்திற்கான விண்ணப்பங்களும் இணையதளம் மூலம் பெறப்படும் வசதி கொண்டுவரப்பட்டது. பொதுமக்கள் TANGEDCO இணையதளத்தின் மூலமாக ஒவ்வொரு மின் உற்பத்தி நிலையத்தின் அப்போதைய நேரடி மின் உற்பத்தி விவரங்களை தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் புவியியல் தகவல் அமைப்பின்  துணைக்கொண்டு மின் நுகர்வோரின் புகார்கள் இணைய வழியில் பதிவு செய்யும் வசதி கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் புகாருக்கு விரைவில் தீர்வு கிடைக்கும். இதற்காக தேசிய அளவில் அதிகபட்சமாக சுமார் 10,000 ஜெனரேட்டர், 3.60 லட்சம் மின் மாற்றிகள், மற்றும் 2.88 கோடி மின் நுகர்வோர்களின் புவியியல் தகவல்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் கணினி சார்ந்த புவியியல் தகவல் அமைப்பில் பதியப்பட்டுள்ளது. உயரழுத்த மின் இணைப்பு வேண்டி விண்ணப்பம் செய்ய இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போது பொதுமக்கள் தங்களது இருப்பிடத்தை வரைபடத்திலிருந்து தெரிவு செய்திட வசதி செய்யப்பட்டுள்ளது. தொழில் முனைவருக்கான ஒற்றை சாளர இணையதளவசதி மூலம் மின் இணைப்பு வேண்டி விண்ணப்பிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. இணையதளம் வாயிலாக மின் கட்டணம் செலுத்தும் வசதி விரிவுபடுத்தப்பட்டு மின்நுகர்வோர் சேவைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தாழ்வழுத்த நுகர்வோர்களின் மின் கட்டணத்தை இணையதளத்தில் வலைதள வங்கி, வங்கியின் பண அட்டை, கடன் அட்டை, யுபிஐ, கூகுள் பே, போன் பே க்யூஆர் குறியீடு, ருபே பண அட்டை  மூலமாக செலுத்துவதற்கு வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கைபேசி செயலி மூலமாக மின் கட்டணம் செலுத்தலாம். மேலும் பாரத் பில் செலுத்தும் முறை, தபால் நிலையங்கள், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மற்றும் சிட்டி யூனியன் வங்கி கவுண்டர்கள், இந்தியன் வங்கி, சிட்டி யூனியன் வங்கி மற்றும் கரூர் வைஸ்யா வங்கியின் கணக்குதார்கள் கைபேசி வங்கியியல் சேவை, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி ஏடிஎம் மற்றும், 12684 இ-சேவை மையங்கள் மூலமாகவும் மின் கட்டணம் செலுத்தலாம். தற்பொழுது, சுமார் 45 விழக்காடு நுகர்வோர்கள் மேற்கண்ட சேவைகள் மூலமாக மின் கட்டணம் செலுத்துகின்றனர்.குடியிருப்பு நுகர்வோருக்கான சூரிய மேற்கூரை திட்டத்திற்கான விண்ணப்பம் இணைய வழி மூலமாக விண்ணப்பிக்கும் வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழக முதல்வரால் துவங்கிவைக்கப் பட்ட ‘மின்னகம்’ பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன், மின் விநியோகம் தொடர்பான அனைத்து வகையான புகார்களையும் தீர்த்து வைக்கும் வகையில் மின்னகம் செயல்படுகின்றது.விவசாய மின் இணைப்புகளுக்கான விண்ணப்பங்கள் இணையதள வழி மூலம் செயல்முறைப்படுத்தப்படும். மின் விகிதப் பட்டியல் மாற்றம் பற்றிய கட்டண மாற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் இணையதள வழி மூலம் பரிசீலனை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது, மின்நுகர்வோருக்கு உடனடியாக மிகுந்த பயனை கொடுக்கும். மின் தடை மற்றும் மின் வழித்தடங்களில் ஏற்படும் தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்புகளை கண்டறியும் நோக்குடன் ரூபாய் 1,270 கோடி மதிப்பீட்டில் மின்மாற்றிகளில் சிறப்பு மின் அளவி பொருத்தும் பணியும் விரைவில் துவங்கப்படும்.  மேலும், இத்தகைய மின் அளவிகளின் மூலம் அந்தந்த மின்மாற்றியகளில்  ஏற்படும் மின்னழுத்த ஏற்றத் தாழ்வுகள், வெப்பம், எண்ணெய் அளவு, செல்லும் மின்சாரத்தின் அளவு, அதிர்வெண் மற்றும் மொத்த மின் தடை ஆகியன பதிவு செய்யப்பட்டு ஸ்கேடா மூலம் அந்தந்த பிரிவு அலுவலர்களுக்கான கணினியுடன் இணைக்கப்படும். இதனால் அந்த மின்மாற்றியின் நிலையினை எந்த நொடியிலும் துறை சார்ந்த அலுவலரால் கண்காணிக்க முடியும். இதனால் மின் தடை ஏற்படும் பட்சத்தில் அதை உடனடியாக நிவர்த்தி செய்ய  நடவடிக்கை எடுக்க வழிவகை ஏற்படும். இதன்மூலம் வருவாய் கூடுவதுடன், மின் ஊழியர் சந்திக்கும் மின் விபத்துகளையும் தவிர்க்க இயலும். மின் நுகர்வோருக்கு நாளின் 24 மணிநேரமும் எவ்வித தங்கு தடையின்றி தடையில்லா மின்சாரம் வழங்குவதை குறிக்கோளாகக் கொண்டே இத்திட்டத்தினை அமல்படுத்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தினால் திட்டமிடப்பட்டுள்ளது.* 44,000 ஸ்மார்ட் மீட்டர்அனைத்து தாழ்வழுத்த மின் இணைப்புகளிலும் தற்சமயம் சாதாரண மின் அளவிகளே பொருத்தப்பட்டுள்ளன. இதனை வினைத்திறன்மிகு மின் அளவிகளாக (ஸ்மார்ட் மீட்டர்) மாற்றம் செய்யப்படும் திட்டமானது குறைந்த கால அவகாசத்தில் செயல்படுத்தப்படும். இதனால் மின் நுகர்வோர் தமது மின் பயன்பாட்டினை எந்நேரமும் கண்காணிக்க முடியும். முன் கூட்டியே தமக்கான மின் கட்டணத்தினை செலுத்தலாம். உபயோகித்த மின்சாரம் முழுவதுமே கணக்கிடப்படுவதால், கணக்கீட்டாளர்களால் ஏற்படும் வருவாய் இழப்பு இந்த வினைத்திறன்மிகு மின் அளவி பொருத்தப்படுவதன் மூலம் தவிர்க்கப்படுவதுடன் கணக்கீடு குறித்த புகார்களும் முற்றிலும் தவிர்க்கப்படும். முதற்கட்டமாக, சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், தியாகராய நகர் பகுதியில் பரப்பு சார் வளர்ச்சி திட்டத்தின்படி 1.41 லட்சம் தாழ்வழுத்த மின் நுகர்வோருக்கு வினைத்திறன்மிகு மின் அளவிகளாக நிறுவும் பணிகளும் நடந்து வருகின்றன. இதுவரை சுமார் 44,000 வினைத்திறன்மிகு மின்அளவில் நிறுவப்பட்டுள்ளன. மேலும், இதற்க்கான மென்பொருள் பகுதி வேலைகளும் முடியும் தருவாயில் உள்ளன.* கவுண்டரில் ‘யுபிஐ’ வசதிநுகர்வோருக்கு வலைத்தள வங்கி பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்துவதற்காக அனைத்து வங்கிகளுக்கும் ஒற்றை கட்டண நுழைவாயில் மூலம் கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளது. தற்போது 17 வங்கிகள் மட்டுமே வலைத்தள வங்கி பரிவர்த்தனை மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. புதிய திட்டத்தின் கீழ் நுகர்வோர் எந்த வங்கியின் மூலமாகவும் வலைத்தள வங்கி பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தலாம். இதைதவிர, டெபிட் / கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி எளிதாக பணம் செலுத்தவும், தமிழ்நாடு முழுவதும் அனைத்து பணம் செலுத்தும் இடங்களிலும் பிஓஎஸ் கருவிகளையும், கவுண்டர்களில் யுபிஐ/க்யூஆர் குறியீடு அடிப்படையிலான கட்டணங்களைக் கொண்டுவரவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது சென்னை மாநகரத்தில் தொடங்கி படிப்படியாக தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும்.* விண்ணப்பம் ரத்தா அலுவலகம் வர வேண்டாம்மின்வாரியத்திற்கு விண்ணப்பிக்கும் நபரின் விண்ணப்பம் ஏதேனும் காரணங்களுக்காக ரத்து செய்யபட்டால் அதற்க்கான பணத்தை பெற வேண்டும் என்றால் சம்மந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் கடிதம் மூலம் விண்ணப்பித்து காசோலை மூலம் தொகையைப் பெற வேண்டும்.இதனால் தேவையற்ற அலைச்சல் ஏற்படுகிறது. எனவே இதனை தடுக்கும் வகையில் விண்ணப்ப தொகையை வங்கி பரிமாற்றத்தின் மூலம் இணையதள வழியில் திருப்பித்தரும் திட்டம் வரவுள்ளது. இதன்மூலம் இனிமேல் விண்ணப்பதாரர் எந்த அலுவலகத்திற்கும் செல்லாமல் பெறவேண்டிய தொகையினை உடனடியாக திரும்பப் பெறுவார்.* மதிப்பிழந்த காசோலை நுகர்வோருக்கு எஸ்எம்எஸ்ஆன்லைனில் அல்லது கவுண்டரில் பணம், காசோலை அல்லது வரைவோலை மூலம் பெறப்பட்ட கட்டணத்தை ஒப்புக்கொள்ளும் எஸ்எம்எஸ் முறை சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது மக்களிடத்தில் வரவேற்பை ஏற்படுத்தியது. மேலும் இதனை மேம்படுத்தும் வகையில் நுகர்வோரால் கொடுக்கப்பட்ட காசோலை மதிப்பிழந்தால் அதனை அவருக்கு எஸ்எம்எஸ் மூலமாகவும் தெரிவிக்கும் வசதி கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் நுகர்வோருக்கு ஏற்படும் பிரச்னை தவிர்க்கப்படும்….

You may also like

Leave a Comment

15 − 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi