மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைபெற விண்ணப்பிக்கலாம்

அரியலூர், ஜூலை 12: அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசின் உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் தேர்ச்சி பெற்றவர்கள், பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பொதுப்பிரிவினர் தங்களது கல்வித்தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து (5) ஆண்டுகள் முடிவடைந்து தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி பதிவுதாரர்கள் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி தேர்ச்சி பெறாத மற்றும் தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டபடிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வரை தங்களது கல்வித்தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிவடைந்திருக்க வேண்டும்.

30.6.2024 அன்று தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினர் 45 வயதிற்குள்ளும், இதரப்பிரிவினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும் மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கு உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை. விண்ணப்பதாரர் எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் கல்வி பயிலுபவராக இருத்தல் கூடாது. ஆனால், தொலைதூர கல்வி பயிலுபவராக இருக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கு வருமான உச்ச வரம்பு ஏதும் இல்லை. வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்திற்குரிய விண்ணப்ப படிவத்தினை அலுவலக வேலை நாட்களில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடன் நேரில் வந்து இலவசமாக பெற்று கொள்ளலாம் அல்லது < https://tnvelaivaaippu.gov.in/downloads/uaApplication.pdf > என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இத்திட்டம் தொடர்பான அனைத்து விவரங்களும் மேற்படி இணையதளத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனைத்து அசல் கல்வி சான்றுகள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகத்துடனும், மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரையில் மேற்படி சான்றுகளுடன் மாற்றுதிறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடனும் நேரில் வருகை புரிந்து விண்ணப்ப படிவத்தினை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், ஏற்கனவே வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்று மூன்றாண்டு முடிவுற்ற பொதுபிரிவினரும் பத்தாண்டுகள் முடிவுற்ற மாற்றுத்திறனாளிகளும் ஏற்கனவே, வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்று வருபவர்களும் மற்றும் வெவ்வேறு துறையின் கீழ் அரசு உதவித்தொகை பெறும் நபர்களும் மற்றும் தனியார்துறையில் பணியாற்றிய மற்றும் பணியாற்றும் நபர்களில் தொழிலாளர் வைப்புநிதி பிடித்தம் செய்யப்பட்டவர்களும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின்கீழ் பயன்பெற தகுதியில்லை. தற்போது உதவித்தொகை பெற்றுவரும் பயனாளிகள் சுயஉறுதிமொழி ஆவணத்தினை பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Related posts

நெல்லை- சென்னை வந்தே பாரத்துக்கு திருச்செந்தூரில் இருந்து இணைப்பு ரயில் நாசரேத் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்

உடன்குடியில் நாளை வருமுன் காப்போம் திட்ட முகாம்

வேப்பங்காடு பள்ளி ஆண்டுவிழா