மாவட்ட அளவில் நடைபெற்ற முதல்வர்கோப்பை விளையாட்டுபோட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்

திருச்சி, ஜூன் 18: திருச்சி மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில்மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தடகளம், கபடி, இறகுபந்து, வாலிபால், சதுரங்கம், டென்னிஸ் உள்பட 15 விளையாட்டுக்கள் கடந்த பிப்.2ம் தேதி தொடங்கி பிப்.28ம் தேதிவரை நடைபெற்று முடிந்தது. விளையாட்டு போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு அலுவலர்கள், பொதுப்பிரிவினர் என 5 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 5,791 பேர் பங்கேற்றதில் 1,783 பேர் மண்டல போட்டிகளுக்கு தேர்வாகினர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நேற்று நடந்தது. டிஆர்ஓ அபிராமி வரவேற்றார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஆண்டனி ஜோயல் பிரபு விளக்க உரையாற்றினார். விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினர். பொதுப்பிரிவில் 250 பேருக்கு ரூ.4.99 லட்சம், அரசு ஊழியர்கள் பிரிவில் 169 பேருக்கு ரூ.3.55 லட்சம், பள்ளி பிரிவில் 653 பேருக்கு ரூ.13.11 லட்சம், கல்லூரி பிரிவில் 641 பேருக்கு ரூ.12.84 லட்சம், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 70 பேருக்கு ரூ.1.46 லட்சம் என மொத்தம் 1,783 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.35.95 லட்சம் மதிப்பிலான பதக்கம், பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை