மாவட்டம் முழுவதும் பைக் ரோந்து பணி தொடக்கம் உடலில் கேமரா பொருத்தாமல் வாகன சோதனை நடத்த கூடாது

* போலீசாருக்கு,  எஸ்.பி. உத்தரவுநாகர்கோவில் : குமரி முழுவதும் பைக்கில் ரோந்து சென்று கண்காணிக்கும் திட்டத்தை எஸ்.பி. பத்ரி நாராயணன் நேற்று தொடங்கி வைத்தார். குமரி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்கும் விதமாக ரோந்து பணியை தீவிரப்படுத்த எஸ்.பி. பத்ரிநாராயணன் உத்தரவிட்டுள்ளார். இதன் ஒரு கட்டமாக ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய போலீசார் அனைவருக்கும் பைக் மற்றும் உடலில் பொருத்தும் கேமரா ஆகியவை வழங்கப்பட உள்ளன. 37 காவல் நிலையங்களில், முதற்கட்டமாக 12 காவல் நிலைய ரோந்து போலீசாருக்கு பைக் மற்றும் கேமரா வழங்கும் நிகழ்ச்சி, நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காலை நடந்தது. எஸ்.பி. பத்ரி நாராயணன் ரோந்து பணிக்கான பைக் மற்றும் கேமராக்களை வழங்கி பேசியதாவது : குமரி மாவட்டத்தில் ரோந்து பணியை தீவிரப்படுத்த 37 போலீஸ் நிலைய பகுதிகள் 92 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ரோந்து மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு போலீசார் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு இரு சக்கர வாகனம், பாடி கேமரா ஆகியவை வழங்கப்பட்டு உள்ளது. ரோந்து பணிக்கு செல்லும் போலீசார் அந்த பகுதிகளின் முழு விவரங்களையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். ரோந்து செல்லும் பகுதியில் உள்ள மக்கள் தொகை, அரசு கட்டிடங்கள், கோவில்கள், ஆலயங்கள், மசூதிகள் விபரங்களை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். தாங்கள் ரோந்து செல்லும் பகுதியில் உள்ள ரவுடிகள் பட்டியல் பற்றிய விபரத்தை தெரிந்து வைத்துக் கொண்டு, அவர்களின் நடவடிக்கைகள் என்ன? என்பதை கண்காணிக்க வேண்டும். பொதுமக்கள், உள்ளூர் பிரமுகர்களை தினமும் சந்தித்து பேச வேண்டும். தங்கள் பகுதிகளில் எந்தெந்த இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைத்தால் திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கலாம். பிரதான சாலைகள் மட்டுமின்றி, உள்ளூர் சாலைகளிலும் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம்? என்பது பற்றி கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுடன் நெருக்கம் அதிகரிக்கவும் இந்த ரோந்து பணிகள் உதவும். ஒருமுறைக்கு இருமுறை செல்லும் போது மக்களுக்கு காவல்துறை மீது நம்பிக்கையும் ஏற்படும். ரோந்து பணி மற்றும் வாகன தணிக்கையின் போது கண்டிப்பாக உடலில் கேமரா பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். அந்தந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.க்கள் ரோந்து போலீசார் தரும் தகவல்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஏ.டி.எஸ்.பி.க்கள் ஈஸ்வரன், சுந்தரம், டி.எஸ்.பி.க்கள் நவீன்குமார், ராஜா, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கண்மணி, இன்ஸ்பெக்டர்கள் திருமுருகன், சாய்லெட்சுமி, கிங்ஸ்லி தேவ் ஆனந்த், தனிப்பிரிவு எஸ்.ஐ. சுபாஷ், சம்சீர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.மாதந்தோறும்  ரிவார்டு எஸ்.பி. பத்ரி நாராயணன் கூறுகையில், ரோந்து பணியில் சிறப்பாக ஈடுபட்டு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் போலீசார் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் ரிவார்டு வழங்கப்படும். இது உங்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். எனவே ரோந்து போலீசார் சிறப்பாக செயல்பட வேண்டும். இந்த பணிகளை சிறப்பாக செய்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் தடுக்க முடியும் என்றார். …

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்