மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 72 பேர் ஊட்டி சிறப்பு முகாமில் பங்கேற்பு-கலெக்டர் வழியனுப்பி வைத்தார்

சேலம் :  தமிழக முதல்வர் மாணவர்களின் தனித்திறன்களை மெருகேற்றும் வகையிலும், கோடை விடுமுறையை பயனுள்ளதாக செலவழித்திடவும்  கோடை கொண்டாட்ட சிறப்புப் பயிற்சி முகாம்கள் மலை சுற்றுலாத் தலங்களில் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இதன்படி சேலம் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 2ம் தேதி (நேற்று) முதல் 7ம் தேதி 5 நாட்கள் ஊட்டியில் கோடை கொண்டாட்டம் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இந்த சிறப்பு பயிற்சி முகாமில் 11ம் வகுப்பு பயிலும் அரசுப் பள்ளியைச் சேர்ந்த 39 மாணவர்கள், 33 மாணவிகள் என 72 மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 2021-22 கல்வி ஆண்டில் மாணவ, மாணவியர்களுக்கு பாடங்கள் தொடர்பாக இணைய வழியில் நடத்தப்பட்ட வினாடி, வினா போட்டியில் சிறப்பாக செயல்பட்டவர்களை தேர்வு செய்து, சிறப்பு பயிற்சி முகாமில் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்த சிறப்புப் பயிற்சி முகாமில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச்சென்று, பங்கேற்க செய்ய மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெறப்பட்டு, ஆசிரியர்களின் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.  இதையொட்டி  கோடைக் கொண்டாட்டம் சிறப்பு பயிற்சி முகாமில் பங்கேற்க உள்ள மாணவ, மாணவிகள் தங்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் கார்மேகத்திடம் நேற்று காலை கலந்துரையாடினர். பொது அறிவு குறித்து மாவட்ட கலெக்டர் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் பதில் அளித்தனர். அப்போது மாணவர்கள் இந்த நல்ல வாய்ப்பினை சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறிய கலெக்டர், அவர்களுக்கு வாழ்த்து கூறி வழியனுப்பி வைத்தார். மாணவர்கள் அைனவரும் நேற்று மாலை ஊட்டிக்கு சென்றனர். நிகழ்ச்சியில்  முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், துணை ஆட்சியர் (பயிற்சி) கனிமொழி, சேலம் கோட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக துணை மேலாளர் (வணிகம்) கலைவாணன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்….

Related posts

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தகவல்!

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே