மாவட்டத்தில் 98 முகாம்கள் மூலம் 5,125 யூனிட் ரத்தம் பெறப்பட்டுள்ளது

கிருஷ்ணகிரி, ஜூன் 16: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த 2022-23ம் ஆண்டில் 98 முகாம்கள் மூலம், 5125 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார். ரத்த தானம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14ம் தேதி உலக ரத்த தான தினம் கடைபிடிக்கப்படுகிறது. நம் உடலின் அனைத்து உறுப்புகளும் சீராக இயங்க ரத்தம் மிக மிக அவசியம். ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் 6 லிட்டர் ரத்தம் உள்ளது. ரத்தத்தில் வெள்ளை அணுக்கள், சிவப்பு அணுக்கள் என இரு வகை அணுக்கள் உள்ளன. இதில் வெள்ளை அணுக்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு துணை புரிகின்றன. சிவப்பு அணுக்கள் நம் உடலுக்கு தேவையான ஆற்றலை தருகின்றன. ரத்தத்தின் அளவு பல்வேறு காரணங்களால் குறைகிறது. நம் உடலில் இரும்புச் சத்து குறைதல் அல்லது உடம்பில் அனீமிக் என்று சொல்லக்கூடிய ரத்தசோகை ஏற்படுதல், சத்தான உணவுகளை உண்ணாமல் இருத்தல், நம்முடைய சூழல் போன்றவற்றால் ரத்தத்தின் அளவு குறைகிறது.

தற்போதைய காலத்தில், விபத்துகளாலும் ஏராளமான ரத்தம் வெளியேறுகிறது. ரத்த தானம் செய்யும் போது, உடலில் உள்ள அதிகப்படியான இரும்பு சத்தும், ரத்தத்தோடு சேர்ந்து செல்வதால் இரும்பு சத்து சமன் செய்யப்படுகிறது. 3 மாதங்களுக்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். நல்ல உடல்நிலையில் உள்ள 18 முதல் 65 வயதுடைய எவரும் ரத்த தானம் செய்யலாம். உடல் எடை குறைந்தது 50 கிலோ இருக்க வேண்டும். ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, ஹீமோகுளோபின் ஆகியவற்றை சோதனை செய்த பின், ரத்த தானம் செய்ய வேண்டும். 350 மில்லி மட்டுமே ரத்தம் தானத்துக்கு எடுக்கப்படுகிறது. உலக ரத்த கொடையாளர் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், 75 ரத்த கொடையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் சரயு தலைமை வகித்து, சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது: உயிருக்கு ஆபத்தான நிலைகளிலும், சிக்கலான மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சையின் கீழும் உள்ள லட்சக்கணக்கான நோயாளிகள், ரத்தம் மற்றும் ரத்த பொருள் மாற்று சிகிச்சையால் காப்பாற்றப்படுகிறார்கள். தன்னார்வ மற்றும் இலவச ரத்த கொடையாளர்களால் மட்டுமே, தொடர்ந்து ரத்தம் மற்றும் ரத்தப்பொருள் போதுமான அளவில் விநியோகம் செய்ய முடியும். உயிர் காக்கும் ரத்தத்தை இலவசமாக வழங்கும் தன்னார்வலர்களான ரத்த தானம் செய்வோரை சிறப்பிக்கவும், கவுரவப்படுத்தி நன்றி தெரிவிக்கும் விதமாக ஜூன் 14ம் தேதி உலக ரத்த கொடையாளர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இன்று உலக ரத்த கொடையாளர் தினத்தை தொடர்ந்து ரத்தம், பிளாஸ்மா கொடுப்போம், வாழ்வை பகிர்ந்து கொள்வோம் என்ற கருப்பொருளுடன் கடைபிடிக்கப்படுகிறது. இம்மாவட்டத்தில் 2022-23ம் ஆண்டில் 98 முகாம்கள் மூலம், 5125 யூனிட் ரத்தம் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் பேசினார். பின்னர், கலெக்டர் தலைமையில் உலக ரத்த கொடையாளர் தின உறுதிமொழியை டாக்டர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் எடுத்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில், நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர். பரமசிவம் ஏஆர்டி மருத்துவ அலுவலர் டாக்டர்.ஜெகன், ரத்த வங்கி மருத்துவர் வசந்தகுமார், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு அலுவலர் அருள் மற்றும் ரத்த கொடையாளர்கள், அனைத்து நம்பிக்கை மைய பணியாளர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Related posts

வில்லியனூர் வாலிபரிடம் 1 லட்சம் மோசடி

ஆனைமலையான்பட்டி குளத்துக்கரையை சேர்ந்த 55 குடும்பத்தினர் மாற்று இடம் கோரி மனு

உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சியில் பெண் உள்பட மேலும் 2 பேர் கைது