மாவட்டத்தில் 42,971 விவசாயிகள் உழவன் செயலி மூலம் பயன்

கிருஷ்ணகிரி, ஆக.29: ஒன்றிய, மாநில அரசுகளின் திட்டங்கள் பற்றி அறிந்து கொள்ள, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 42 ஆயிரத்து 971 விவசாயிகள் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து, 22 வகையான சேவைகளை பெற்று பயனடைந்து வருகின்றனர்.

விவசாயத்தை பிரதானமாக கொண்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர். காய்கறி, பழங்கள், பயிர் சாகுபடி உள்ளிட்ட பல்வேறு உழவர் நலன் சார்ந்த தகவல்களை விவசாயிகளுக்கு உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில், கடந்த 2017ம் ஆண்டு உழவன் செயலி வடிவமைக்கப்பட்டது. இது 2018ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது. பயிர் சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள், வானிலை முன்னறிவிப்பு, அரசின் மானிய திட்டங்கள், விளைச்சல் அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள் போன்ற பல்வேறு இடங்களுக்கு சென்று தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களையும், விளை பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைப்பதற்கான வழிமுறைகளையும், விவசாயிகளின் செல்போன் மூலம் வழங்குவதே, உழவன் செயலியின் முக்கிய நோக்கமாகும்.

கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், 9 சேவைகளுடன் அறிமுகம் செய்யப்பட்ட உழவன் செயலி, தற்போது புதுப்பிக்கப்பட்டு 22 வகையான சேவைகளை வழங்கி வருகிறது. இது தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடையே பிரபலமாகி வரும் உழவன் செயலியை, இதுவரை 42 ஆயிரத்து 971 விவசாயிகள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2018ம் ஆண்டு 13,564 விவசாயிகளும், 2019ம் ஆண்டு 3,847 விவசாயிகளும், 2020ம் ஆண்டு 6,672 விவசாயிகளும், 2021ம் ஆண்டு 4,726 விவசாயிகளும், 2022ம் ஆண்டு 4,917 விவசாயிகளும், 2023ம் ஆண்டு 7,566 விவசாயிகளும், 2024ம் ஆண்டு 1,679 விவசாயிகளும் என மொத்தம் இதுவரை 42 ஆயிரத்து 971 விவசாயிகள், இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் கூறியதாவது:
விவசாயிகளின் வாழ்க்கையை மிகவும் எளிதாக்கி, அவர்கள் அதிக வருமானம் ஈட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள உழவன் செயலியை, இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 43 ஆயிரம் விவசாயிகள் பதிவிறக்கம் செய்துள்ளனர். இதுவரை பதிவிறக்கம் செய்யாத விவசாயிகள், வியாபாரிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உள்ளிட்ட வேளாண்மையில் ஈடுபட்டுள்ள அனைவரும், உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து பயனடையலாம். இந்த செயலியில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல், வேளாண்மை விற்பனை துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் மாநிலத் திட்டங்கள் குறித்த தகவல்கள், இடுபொருள் முன்பதிவு, பயிர்வாரியான காப்பீட்டுக் கட்டணம், காப்பீடு செய்வதற்கு தேவையான ஆவணங்கள், தனியார், கூட்டுறவு விற்பனை நிலையங்களில் உள்ள ரசாயன உரங்களின் இருப்பு, விலை குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படுகின்றன.மேலும், வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு, ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், உழவர் சந்தைகளில் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் காய்கறிகளின் தினசரி சந்தை விலை, மாவட்டம் வாரியாக தினசரி வானிலை முன்னறிவிப்பு மற்றும் தமிழ் மொழியில் உள்ளூர் வானிலை அறிவிப்பு இந்த செயலி மூலம் வழங்கப்படுகிறது. தங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தகவல்களையும், உழவன் செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம். தமிழக அளவில் விவசாயிகள் இடையே பிரபலமாகி வரும் உழவன் செயலியை, அனைத்து விவசாயிகளும் செல்போனில் பதிவிறக்கம் செய்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி