மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் ஒன்றரை மாதத்திற்கு பிறகு டீக்கடை, சலூன், செல்போன் கடைகள் திறப்பு-வாகன போக்குவரத்து அதிகரிப்பு

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டதால், ஒன்றரை மாதத்திற்கு பிறகு மாவட்டத்தில் டீ கடை,  சலூன், செல்போன் கடை, ஹார்டுவேர் கடைகள் நேற்று திறக்கப்பட்டது.தமிழகத்தில்  கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு கடந்த மாதம் 10ம்  தேதி அமல்படுத்தப்பட்டது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று  குறைந்ததால், தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளித்து வருகிறது. ஈரோடு  மாவட்டத்தில் கொரோனா பரவல் தற்போதுதான் கட்டுக்குள் வந்து  கொண்டிருக்கிறது. ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள தளர்வுகளில் கூடுதல் தளர்வுகள்  மட்டும் அளித்து ஜூலை 5ம் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில்,  ஈரோடு மாவட்டத்தில் டீ கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை பார்சல்   மட்டுமே அளிக்கவும், மென்பொருட்கள், எலக்ட்ரிக் கடைகள் காலை 9 மணி முதல்  மாலை 7 மணி வரையும், ஹார்டுவேர் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி  வரையும், ஸ்டேஷனரி கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரையும், காலணிகள்  விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரையும், பியூட்டி  பார்லர், சலூன் கடைகள் குளிர்சாதன வசதி இல்லாமல் 50 சதவீத  வாடிக்கையாளர்களுடன்  மட்டும் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை  இயங்க  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாத்திர கடைகள், பேன்சி ஸ்டோர்ஸ், போட்டோ  ஸ்டுடியோக்கள், சலவை, தையல், அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள், செல்போன்  விற்பனை, அதனை சார்ந்த நிறுவனங்கள், வாகன விற்பனையகங்கள், பழுது பார்க்கும்  மையங்கள், உதிரிபாகங்கள் விற்னை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7  மணி வரையும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.அரசு, உள்ளாட்சி  அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள், விளையாட்டு திடல்களில்  காலை 6மணி முதல் காலை 9 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இனிப்பு கார வகை கடைகள் பார்சலில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இ-சேவை மையங்கள் வழக்கம்போல் செயல்பட அனுமதி  என பல்வேறு முக்கிய தளர்வுகள் அரசு அறிவித்தது. இந்த தளர்வுகள்  அளிக்கப்பட்ட ஊரடங்கு நேற்று (திங்கட்கிழமை) முதல் ஈரோடு மாவட்டத்தில்  அமல்படுத்தப்பட்டதால், ஒன்றரை மாதத்திற்கு பிறகு மாவட்டத்தில் டீ கடைகள்,  சலூன் கடைகள், பேக்கரிகள், சாலையோர உணவகங்கள், செல்போன் விற்பனை, உதிரிபாக  கடைகள், எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கடைகள்  அரசின் உத்தரவின்பேரில் நேற்று திறக்கப்பட்டது. முன்னதாக இந்த கடைகளின்  உரிமையாளர்கள், ஊழியர்கள் அதிகாலையிலேயே கடைக்கு வந்து சுத்தம் செய்து,  கடைக்கு முன் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் சுண்ணாம்பில் வட்டம்  போட்டும், இஷ்ட தெய்வத்தை வணங்கி கடைகளை திறந்தனர். வாகன போக்குவரத்து அதிகரிப்பு:ஈரோடு  மாவட்டத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால்,  மாவட்டத்தின் அனைத்து சாலைகளிலும் வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும்  அதிகரித்து காணப்பட்டது. இதனால், மாவட்டத்தில் போலீசார் ஆங்காங்கே வாகன  தணிக்கை மேற்கொள்வதற்காக ஒரு வழிப்பாதையாக அமைக்கப்பட்டிருந்த  பேரிகார்டுகள், தடுப்புகளை அகற்றி, இரு வழிப்பாதையாக வழக்கம்போல்  மாற்றினர். ஈரோடு மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டம் செல்வதற்கும், பிற  மாவட்டத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் வருவதற்கும் இ-பாஸ் நடைமுறை  அமல்படுத்தப்பட்டுள்ளதால், மாவட்ட எல்லைகளில் மட்டும் தொடர்ந்து போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, இ-பாஸ் பெறாத வாகனங்களை தடுத்து நிறுத்தி  நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு  தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், டாஸ்மாக் மதுக்கடை,  தனியார் பார்களுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. அதேபோல், அரசு மற்றும்  தனியார் பஸ் போக்குவரத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்பது  குறிப்பிடத்தக்கது. …

Related posts

ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!

பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!

அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதன தர்மம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு