மாவட்டங்களுக்கு இடையே கிரிக்கெட் போட்டிக்கு வீரர்கள் தேர்வு முகாம்

 

தர்மபுரி: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிக்கு வீரர்கள் தேர்வு, இன்று (30ம் தேதி) நடக்கிறது. இது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தர்மபுரி மாவட்ட செயலாளர் மார்ட்டின்ராஜ் அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள், வரும் மே மாதம் இறுதி வாரத்தில் துவங்க உள்ளது. இதில் பங்குபெறும் தர்மபுரி மாவட்ட 14 வயது, 16 வயது மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட அணிகளை தேர்வு செய்யும் முகாம், இன்று (30ம் தேதி) மற்றும் நாளை நடைபெறவுள்ளது. இந்த முகாம் தர்மபுரி கமலம் இண்டர்நேஷனல் பள்ளியில் நடைபெறும்.

இன்று காலை 8 மணிக்கு நடைபெறும் 16 வயதுக்கு உட்பட்ட அணியினை தேர்வு செய்யும் முகாமில் 1.9.2007 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பிறந்தவர்கள் கலந்து கொள்ளலாம். 19 வயதுக்கு உட்பட்ட அணியினை தேர்வு செய்யும் முகாம் மதியம் 2 மணியளவில் நடக்கிறது. இதில் 1.9.2004 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பிறந்தவர்கள் கலந்து கொள்ளலாம். அதே போல், 14 வயதுக்கு உட்பட்ட அணியினை தேர்வு செய்யும் முகாம், நாளை (1ம் தேதி) காலை 9 மணிக்கு நடக்கிறது. தர்மபுரி வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே, இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு, கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்படும். இதற்கான விண்ணப்பங்கள் நேரில் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை