மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில் மாற்றம் கொண்டு வரவேண்டும்: தமிழக அரசுக்கு கமல் கோரிக்கை

சென்னை: மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று, தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில், வரும் செப்டம்பர் 1ம் தேதி அன்று மாற்றுத்திறனாளிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற இருக்கிறது. அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்  மற்றும் பிற சங்கங்கள் சார்பாக நீண்ட நாட்களாக முன்வைக்கும்  கீழ்க்கண்ட கோரிக்கைகளை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.   மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித்தொகை உயர்த்தப்பட வேண்டும். அரசுத்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தனியார் வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு  5 சதவிகிதம் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். பார்வைக்குறைபாடு உடையவர்கள் கல்வி கற்க தஞ்சாவூர், திருச்சி, சென்னை போன்ற மாவட்டங்களில் உயர்நிலை, மேல்நிலை என சுமார் 10 சிறப்பு பள்ளிகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க, மாவட்டங்கள்தோறும் சிறப்பு பள்ளி ஒன்றை உருவாக்க வேண்டும். மனநலன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாவட்டங்களில் கல்வி நிலையங்கள் மற்றும் பராமரிப்பு இல்லங்கள் ஆகியவற்றை அதிகரிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் உதவி எண் தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட வேண்டும். கடுமையான மாற்றுத்திறனாளிகளின் மருத்துவ சிகிச்சைக்கு உதவும் வகையில், முதல்வர் மருத்துவ காப்பீட்டு வசதி வழங்கப்பட வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பது போல், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக கொள்கைகளை உருவாக்கவும், செயல்படுத்தவும் ஒருங்கிணைப்பு குழு அமைப்பது, ஸ்மார்ட் கார்டு வழங்குவது, மூன்று சக்கர மோட்டார் வாகனம் வழங்குவது, அரசு வேலைவாய்ப்புகளில் உள்ள இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்துவது ஆகியவற்றை விரைவில் செயல்படுத்த வேண்டும். கடந்த ஆட்சியில் அதிமுக அரசு மாற்றுத்திறனாளிகளின் குரலுக்கு செவிசாய்க்காமல் இருந்துவிட்டது துரதிருஷ்டவசமானது. மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் 2016ன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு உரியவற்றை செய்து கொடுக்க ஆவன செய்யும்படி தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்….

Related posts

திருத்தணி முருகன் கோயிலில் வாழும்கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் சாமி தரிசனம்

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சிமென்ட் கலவை லாரி தீப்பிடித்ததால் பரபரப்பு