மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 100 மருத்துவ முகாம்கள்

தர்மபுரி, ஆக.18: தர்மபுரி மாவட்டத்தில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களை பெறுவதற்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்கள், நாளை (19ம் தேதி) மற்றும் வரும் 26ம் தேதி ஆகிய இருதினங்களில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து கலெக்டர் கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 100 மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 2 வருவாய் கோட்டங்களில், பல்வேறு அரசுத் துறைகளில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம்கள், தர்மபுரி கோட்டத்தில் நாளை (19ம் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை, தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், வரும் 26ம் தேதி காலை 10 மணி முதல் 2 மணிவரை அரூர் கோட்டத்தில், அரூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியிலும் நடக்கிறது.

இம்முகாமில், இதுநாள் வரை தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு, தேசிய அடையாள அட்டை வழங்குதல், மாற்றுத்திறனாளிகள் நல வாரிய பதிவு செய்தல், யூடிஐடி ஸ்மார்ட் கார்டு பதிவு செய்தல், மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பராமரிப்பு உதவித் தொகை, வங்கிகடன் மான்யம், உதவி உபகரணங்கள் வருவாய்த்துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி தொகை, இலவச வீட்டு மனை பட்டா, வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் வேலைவாய்ப்பு பதிவு, புதுப்பித்தல், வேலை வாய்ப்பற்றோர் நிதி உதவித்தொகை, தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல், மாவட்ட தொழில் மையம் மூலம் வங்கி கடன் உதவி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் சுயதொழில் புரிவதற்கு வங்கிகடன் மற்றும் வீடு கட்டுவதற்கு கடனுதவி, முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் மருத்துவ காப்பீட்டு உறுப்பினர் சேர்க்கை, போன்ற திட்டங்களில் பயன் பெற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, ஸ்மார்ட் கார்டு, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை புகைப்படம் 5 ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை