மாயமான 76 வயது தாயை மீண்டும் கண்டுபிடித்த மகள் சாலையோரம் தவித்தவரை ஆஸ்பத்திரியில் சேர்த்த எஸ்பிக்கு நன்றி

 

திருவில்லிபுத்தூர், ஏப்.28: திருவில்லிபுத்தூர் மாயாண்டிபட்டி தெருவில் ஆதரவின்றி சாலையோரம் வசித்த உடல்நலம் பாதித்த மூதாட்டியை எஸ்பி சீனிவாசபெருமாள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தார். இந்நிலையில் நேற்று காலை நாளிதழில் வெளியான செய்தியை பார்த்து அவரது மகள் சரோஜா(50) திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்து அவரது தாயை பார்த்து கதறி அழுதார். பின்னர் செய்தியாளர்களிடம் சரோஜா கூறுகையில், ‘‘நான் சிவகாசியில் குடியிருந்து கூலி வேலை பார்த்து வருகிறேன். எனது தாயார் ராமுத்தாய்(76) என்னுடன் இருந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்றேன். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் தாயாரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

நேற்று முன்தினம் விருதுநகர் மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள் எனது தாயாரை மீட்டு சிகிச்சைக்காக திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்திருப்பதை நாளிதழில் பார்த்து தெரிந்து இங்கு வந்தேன். தற்போது எனது தாயார் நல்ல முறையில் உள்ளார். கடந்த 15 நாட்களாக எனது தாயாரை தேடி அலைந்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில் விருதுநகர் எஸ்பி மூலம் எனது தாய் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எனது தாயை கண்டுபிடித்துக் கொடுத்தும், சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்த எஸ்பி சீனிவாசபெருமாளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கண்ணீருடன் தெரிவித்தார். மேலும், ‘‘எனக்கு கணவர் கிடையாது. நான் கூலி வேலை பார்த்து வருகிறேன். எனது அம்மாவை பராமரிக்கவும் எங்கள் குடும்பச் செலவிற்கும் தமிழக அரசின் முதியோர் உதவித்தொகை கிடைக்க உதவி செய்ய வேண்டும்’’ என வேண்டுகோள் விடுத்தார்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு