மாம்பழ கடைகளை அமைத்த வியாபாரிகள்

 

காரிமங்கலம், ஏப்.7: காரிமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் மாம்பழ கடைகளை அமைக்கும் பணியில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். போதிய விளைச்சல் இல்லாததால் வரத்து குறைந்து, மாம்பழம் விலை உயர்ந்துள்ளது. தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் மா சாகுபடி அதிக அளவில் உள்ளது. தர்மபுரி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ் சாலையில் பெரியாம்பட்டி, பொன்னேரி, கெரக்கோடாஅள்ளி, காரிமங்கலம் பைபாஸ் ரோடு ஆகிய பகுதிகளில், ஆண்டுதோறும் சீசன் காலத்தில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மாம்பழக் கடைகளை போடுகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலையில் கார், லாரிகளில் வருபவர்கள் இந்த கடைகளில் கூடை கூடையாக பல்வேறு வகையான மாம்பழங்களை வாங்கிச் செல்வார்கள். தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டில் சீசன் மாம்பழக் கடைகள் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளில் மாம்பழங்களின் விலை உச்சத்தில் உள்ளது. போதிய மழையின்றி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததால், மாம்பழங்களின் விலை உயர்ந்துள்ளது.

இந்த கடைகளில் செந்தூரா, பெங்களூரா மாம்பழம் கிலோ ரூ.80க்கும், மல்கோவா ரூ.200க்கும், லட்டு ரகம் ரூ.170 க்கும் விற்பனை செய்யப்பட்டது. தற்போது குறைந்த ரக மாம்பழங்கள் மட்டுமே வந்துள்ளது. வரும் நாட்களில் மேலும் பல ரக மாம்பழங்கள் விற்பனைக்கு வரும். மாம்பழ விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் நடப்பாண்டில் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை