மாமியார் மன்னித்ததால் மருமகனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை ரத்து

சென்னை: மாமியாரை அரிவாள் மனையால் வெட்டிய மருமகனுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனை, மாமியார் மன்னித்ததால் ரத்து செய்யப்பட்டது. சேலம் ஆத்தூரை சேர்ந்தவர் சிவசுப்பிரமணி. இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2017 டிசம்பர் 28ம் தேதி இவர் வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதில் வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த சுப்பிரமணி வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து தனது மாமியாரின் முதுகில் வெட்டியுள்ளார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டு, சேலம் மகளிர் நீதிமன்றம் சுப்பிரமணிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து கடந்த மே 25ம் தேதி தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து சிவசுப்பிரமணி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிபதி பரத சக்கரவர்த்தி விசாரித்தார். அப்போது, சுப்பிரமணி சார்பில் வழக்கறிஞர் பாயிண்ட் பாலாஜி ஆஜராகி, மனுதாரரும் அவரது மாமியாரும் சமாதானமாகியுள்ளனர். எனவே, மனுதாரரை விடுதலை செய்ய வேண்டும். மாமியாரும், மனுதாரரின் மனைவியும் குழந்தைகளும் வந்துள்ளனர் என்றார். அதன்படி அவர்கள் நீதிபதி முன் ஆஜராகினர்.  மகள் மருமகனுடன் வாழவும், குழந்தைகளை வளர்க்கவும் வேண்டும். அதனால் அவரை நான் மன்னித்து விட்டேன். அவரை விடுதலை செய்யுங்கள் என்று மாமியார் மனு தாக்கல் செய்தார்.இதையடுத்து நீதிபதி அளித்த தீர்ப்பு: கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஏற்படும் பிரச்னைகளை தீர்ப்பதில் உயர் நீதிமன்றம் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தலாம் என்று ஜோஷி என்பவர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட பிறகும் உயர் நீதிமன்றம் குடும்ப பிரச்னையில் அதிகாரத்தை பயன்படுத்தலாம். இந்த வழக்கில் கொலை முயற்சி மற்றும் கொடுங்காயம் விளைவித்தல் பிரிவில் மனுதாரருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையால் குற்றம் நடந்துள்ளது. கணவனுக்கும் மனைவிக்கும் இடையே இருந்த பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது. எனவே, உயர் நீதிமன்றத்திற்கு தரப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி மனுதாரரை இந்த நீதிமன்றம் விடுதலை செய்கிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது….

Related posts

சென்னையில் 17 வழித்தடங்கள் மூலம் விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலம்:  கட்டுப்பாடுகளை மீறினால் கைது  காவல்துறை எச்சரிக்கை

அடையாறு பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் : காவல் துறை அறிவிப்பு

தி.நகர் காவல் மாவட்டத்தில் போதை தடுப்பு நடவடிக்கை கஞ்சா விற்ற 30 பேர் கைது