மாமல்லபுரம் கடற்கரை கோயிலை இரவில் சுற்றிப் பார்க்கலாம்: அனுமதி கிடைத்ததால் ஏராளமான பயணிகள் குவிந்தனர்

மாமல்லபுரம், ஜூலை 16: தினகரன் செய்தி எதிரொலியாக மாமல்லபுரம் கடற்கரை கோயிலை மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை சுற்றிப்பார்க்க பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் கடற்கரை கோயிலை சுற்றிப் பார்த்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். இங்குள்ள புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பயணிகள் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் இரவு நேரங்களில் புராதன சின்னங்களை கண்டு ரசிக்க விரும்பினர்.

ஆனால் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. மாலை 6 மணிக்குப் பிறகு வரும் பயணிகள் பலர் கடற்கரை கோயில், வெண்ணெய் உருண்டை பாறை, அர்ஜூனன் தபசு மற்றும் ஐந்து ரதம் ஆகியவற்றை மின்விளக்கு வெளிச்சத்தில் காணமுடியவில்லை. அனுமதி இல்லாமல் மாலை 6 மணிக்குப் பிறகு மாமல்லபுரம் வருபவர்கள் புரதானச்சின்னங்களின் நுழைவுவாயில் கதவு வரை வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றர். இதுகுறித்து, தொடர்ந்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இந்நிலையில் கடந்த மாதம் 29ம் தேதி இரவு தொல்லியல் துறை அதிகாரிகள் புராதன சின்னங்கள் பகுதியில் நேரில் வந்து பார்வையிட்டனர். அப்போது புராதன சின்னங்களில் சரியாக மின் விளக்குகள் ஏரிகிறதா? இரவில் பயணிகளை அனுமதிக்க பாதுகாப்பு வசதி உள்ளதா? என பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். இதனையடுத்து நேற்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை மின் விளக்கு வெளிச்சத்தில் கடற்கரை கோயிலை சுற்றிப் பார்க்க பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் நேற்று மாமல்லபுரம் வந்த வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகள் ஏராளமானோர் கடற்கரை கோயில் நுழைவு பகுதியில் டிக்கெட் வாங்கி ஆர்வமாக சென்று கடற்கரை கோயிலை கண்டு ரசித்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். செய்தி, வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு சுற்றுலாப் பயணிகள் நன்றி தெரிவித்தனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு