மாமல்லபுரம் அருகே கொக்கிலமேடு கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் அபாயம்: போலீசார் குவிப்பால் பரபரப்பு

மாமல்லபுரம், ஜூலை. 18: மாமல்லபுரம் அருகே கொக்கிலமேடு கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் நடராஜன், துணை தலைவரின் கணவர் வெங்கடேசன் ஆகியோர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை, மழைநீர் வடிகால்வாய்கள் அமைத்ததில் பல லட்சம் ஊழல் செய்திருப்பதாக கூறி செங்கல்பட்டு சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் மீனவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், சார் ஆட்சியர் நாராயண சர்மா மீனவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

அப்போது, உடன்பாடு ஏற்படாத நிலையில், மீனவர்கள் பேச்சுவார்த்தையை புறக்கணித்து வெளியேறினர். தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே கொக்கிலமேடு மீனவர் பகுதியில் தகராறு ஏற்பட்டு கைகலப்பு நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாவதை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொக்கிலமேடு பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கொக்கிலமேடு நுழைவு வாயில், மீனவர் பகுதி உள்ளிட்ட இடங்களில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி