மாமல்லபுரத்தில் பயன்பாட்டில் இல்லாத 2 சுங்கச்சாவடிகள் அகற்றம்; வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் பயன்பாட்டில் இல்லாத 2 சுங்கச்சாவடிகளை அகற்றும் பணியில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் பயன்பாட்டில் இல்லாத சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி வரை கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. இச்சாலையை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் பராமரித்து வந்தது. மேலும், இந்த சாலை வழியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புதுச்சேரி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு தென் மாவட்டங்களுக்கு அதிகளவில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், அதிக வாகன போக்குவரத்து காரணமாக வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துகளும் நடப்பது வழக்கமாக உள்ளது. விபத்துகளை, குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு விரைவில் சென்று சேரும் வகையிலும், மாமல்லபுரம் சிற்ப கலை கல்லூரி முதல் புதுச்சேரி இடையே தேசிய நெடுஞ்சாலையாக அறிவித்து, நான்கு வழிச்சாலை அமைக்க ஒன்றிய அரசு கடந்தாண்டு ஒப்புதல் அளித்தது.இதில், முதல் கட்டமாக மாமல்லபுரம் – முகையூர் இடையே 30 கி.மீ. தூரமும், இரண்டாவது கட்டமாக முகையூர் – மரக்காணம் 30 கி.மீ இடையேயும், மூன்றாவது கட்டமாக மரக்காணம் – பாண்டிச்சேரி இடையே 30 கி.மீ. தூரம் அடுத்தடுத்து நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி நடக்க உள்ளது. இதில், கூவத்தூர் அருகே வடபட்டினம், மரக்காணம் அருகே தேன்பாக்கம், பாண்டிச்சேரி அருகே ஒரு சுங்கச்சாவடி என மொத்தம் 3 டோல் பூத்துகள் அமைக்க ஒன்றிய சாலை மேம்பாட்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, கடந்த சில மாதத்துக்கு முன்பு ரூ.1,270 கோடியில் முதல் கட்டமாக மாமல்லபுரம் – முகையூர் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும், மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலையை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இந்நிலையில், தற்போது ஒன்றிய சாலை மேம்பாட்டு நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி சந்திப்பில் திருப்போரூர் செல்லும் சாலை, திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் உள்ள 2 சுங்கச்சாவடிகள், மாமல்லபுரம் அடுத்த வெங்கப்பாக்கத்தில் உள்ள ஒரு சுங்கச்சாவடி, மரக்காணம் அடுத்த அனுமந்தை சுங்கச்சாவடி என 4 சுங்கச்சாவடிகளிலும், நான்கு வழிச்சாலை பணி முடியும் வரை கட்டணமின்றி பயணிக்கலாம் என ஒன்றிய சாலை மேம்பாட்டு நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி அறிவித்தது. இந்நிலையில், பூஞ்சேரியில் பயன்பாட்டில் இல்லாத 2 சுங்கச்சாவடிகளை பிரித்து அகற்றும் பணியில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன ஊழியர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை