மாமல்லபுரத்தில் துணை ஆட்சியர் குழு ஆய்வு : புராதன சின்னங்களை கண்டு ரசித்தனர்

 

மாமல்லபுரம்,செப். 24: மாமல்லபுரத்தில் பயிற்சி துணை ஆட்சியர் குழுவினர் புராதன சின்னங்களை சுற்றி பார்த்து குழுப் புகைப்படம் எடுத்து கொண்டனர். கடந்த 2019-20ம் ஆண்டில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட 18 பயிற்சி துணை ஆட்சியர் குழுவினர், கடந்த 13ம் தேதி முதல் தமிழ்நாட்டில் காவிரி பாசன ஆய்வு, வனவிலங்கு தேயிலை தோட்டங்கள், துறைமுகம், மன்னார் வளைகுடா, அணுமின் நிலையங்கள், தமிழ் பல்கலைக் கழகங்கள், நிலக்கரி சுரங்கங்கள், பாரம்பரிய இடங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக 18 துணை ஆட்சியர்கள் நேற்று மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க கடற்கரை கோயில் வளாகம் வந்தனர். அவர்களை, திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராஜேஷ்வர், துணை தாசில்தார் சையது அலி, வருவாய் ஆய்வாளர் ரகு, பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் ஆகியோர் வரவேற்று புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்றனர். மேலும், கடற்கரை கோயில், ஐந்து ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து ஆய்வு செய்தனர்.

பின்னர், அனைவரும் புராதன சின்னங்கள் முன்பு நின்று குழுப்புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, கடல் உப்புப்காற்று அரிக்காத வகையில் கடற்கரை கோயில் எப்படி பழமை மாறாமல் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது போன்ற தகவல்களையும், கோயிலை உருவாக்கிய மன்னர்களின் வரலாறுகள் குறித்தும் அங்குள்ள சுற்றுலா வழிகாட்டிகள் மூலம் கேட்டு தெரிந்து கொண்டனர். இந்நிகழ்வில் மாமல்லபுரம் விஏஓ மணிகண்டன், மணமை விஏஓ வடிவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை