மாமல்லபுரத்தில் தமிழ் உறவுகளை புதுப்பிக்கும் ‘வேர்களை தேடி’ திட்டம்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்

திருக்கழுக்குன்றம், டிச.28: மாமல்லபுரத்தில் உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளை புதுப்பிக்கும் ‘வேர்களை தேடி’ திட்டத்தினை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்கைள், இளம் மாணவர்கள் தாய் தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வண்ணம், அயல்நாடுகளில் 2 தலைமுறைகளுக்கு மேல் வசிக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாரிசுகள் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி படிப்பு பயின்று வரும் மாணவர்கள், ஆண்டுக்கு 200 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழ்நாட்டிற்கு 2 வாரங்கள் பண்பாட்டு சுற்றுலாவிற்கு அழைத்துவரப்படுவர்.

அவர்களுக்கு, தமிழ்நாட்டின் தொன்மை வாய்ந்த பண்பாட்டு தளங்களுக்கு கலை, பண்பாட்டு, வரலாற்று சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வது மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை வாயிலாக தமிழ்நாட்டின் முக்கிய பல்கலைகழகங்கள் உடனான கலந்துரையாடல் மற்றும் கருத்து பரிமாற்றம் போன்றவற்றிக்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. இது தமிழ்நாட்டின் பண்டைய கலாச்சாரத்தினையும், தமிழரின் வாழ்வியல் நெறியையும் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாக அமையும் என்று கூறப்படுகிறது. அதனடிப்படையில், மாமல்லபுரத்தில் உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளை புதுப்பிக்கும் ‘வேர்களை தேடி’ திட்டத்தின் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் அயலக, தமிழக நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு, வேர்களை தேடி திட்டத்தின் மூலம் பண்பாட்டு பயணத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின்போது, அயலக தமிழர் நலத்துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், சார் ஆட்சியர் நாராயணசாமி, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆனந்த் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில், 15 நாட்கள் மேற்கொள்ளப்படும் இப்பண்பாட்டு பயணத்திற்காக ஆஸ்திரேலியா, கனடா, பிஜி, இலங்கை, ஆகிய பல்வேறு நாடுகளிலிருந்து 58 இளைஞர்கள் தேர்வாகி தமிழ்நாடு அரசு செலவில் சென்னை வந்தனர்.

அவர்கள் நேற்று சென்னையிலிருந்து மாமல்லபுரம் வந்து, மாமல்லபுரத்திலிருந்து தொடங்கி தஞ்சாவூர், சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திருச்சி, செஞ்சிக்கோட்டை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களுக்குச் சென்று தமிழர்களின் கட்டிடக்கலை சிற்பக்கலை, இயல், இசை, நாட்டியம், ஓவியம், சுதந்திர போராட்ட வரலாறு மற்றும் பல்வேறு வரலாறு ஆகியவற்றை அறிந்துகொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை