மாமனாரை கல்லால் தாக்கிய மருமகன் கைது போலீசார் விசாரணை செய்யாறு அருகே நகை அடகு வைத்த தகராறு

செய்யாறு, செப்.24: செய்யாறு அருகே நகை அடகு வைத்த தகராறில் மாமனாரை கல்லால் தாக்கிய மருமகனை போலீசார் கைது செய்தனர்.செய்யாறு அடுத்த வாழ்குடை கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை(48), விவசாயி. இவருக்கு பவானி, கனிமொழி என்ற 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகிவிட்டது. பவானிக்கு சென்னை தாம்பரம் ரங்கநாதபுரத்தை சேர்ந்த நிர்மல்குமார்(32) என்பவருடன் திருமணம் நடந்தது. அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நிர்மல்குமார் சரிவர வேலைக்கு செல்வதில்லையாம். இதனால், அண்ணாமலை தனது மகள் குடும்பத்தினரை தாம்பரத்தில் இருந்து கடந்த 8 மாதத்திற்கு முன்பு அழைத்து வந்து செய்யாறு அடுத்த பாராசூர் கிராமத்தில் தனிக்குடித்தனம் வைத்துள்ளார். ஆனால், இங்கு வந்த பிறகும் மருமகன் நிர்மல்குமார் வேலைக்கு செல்லாமல், மனைவி மற்றும் குழந்தைகளின் நகைகளை அடகு வைத்து செலவழித்து வந்துள்ளார்.

அதேபோல், நேற்று முன்தினம் மாலை ஒரு குழந்தையின் அரைஞாண் கயிற்றை கழற்றி மாமனார் அண்ணாமலை வீட்டிற்கு சென்று அவரிடம் கொடுத்து அடகு வைக்கும்படி கூறியுள்ளார். அதன்படி, அண்ணாமலை நகையை அடகு வைத்து ₹8 ஆயிரத்தை மருமகனிடம் கொடுத்துள்ளார். ஆனால், நிர்மல்குமார் மேலும் அதிக பணம் வாங்கி வர முடியாதா? எனக்கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது, ஆத்திரம் அடைந்த நிர்மல்குமார், மாமனார் அண்ணாமலையின் தலையில் கல்லால் சரமாரி குத்தியுள்ளார். இதில், படுகாயம் அடைந்த அவரை மகள் பவானி மீட்டு செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அண்ணாமலை கொடுத்த புகாரின்பேரில் செய்யாறு சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப் பதிந்து நிர்மல்குமாரை நேற்று கைது செய்து விசாரித்து வருகிறார்.

Related posts

வார்டு குழு அலுவலக அறிவிப்பு பலகையில் மாநகர சாலையோர வியாபாரிகள் பட்டியல்: மாநகராட்சி கமிஷனர் தகவல்

வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி: லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளைஞர்கள் கலெக்டரிடம் மனு

மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம்