Sunday, October 6, 2024
Home » மானுடவியலில் முதல் ஆராய்ச்சி மாணவி நான்

மானுடவியலில் முதல் ஆராய்ச்சி மாணவி நான்

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் தோழி அறிவியல், வரலாறு, புவியியல், சமூகவியல், கணிதம் என தனித்தனியே துறை இருக்கு. அதென்ன மானுடவியல்(anthropology) என்ற கேள்விகளோடு, இதில் தமிழ் வழியில் ஆராய்ச்சி படிப்பை முதல்முறையாக மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றிருக்கும் ஹேமமாலினியோடு பேசியபோது… ‘‘நான் கிராமத்துச் சூழலில் வளர்ந்த பெண். பனிரெண்டாம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவியாக வந்தேன். இருந்தாலும் பி.ஏ. வரலாறு படித்தேன். தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் இணைந்து எம்.ஏ. மானுடவியலைத் தேர்வு செய்தேன். அப்போது துறை சார்ந்தும், கலாச்சார ரீதியாகவும் நிறைய பயணங்களை மேற்கொண்டேன். கலைக்கூத்தாடிகள், நாடோடி களை எல்லாம் சந்தித்தபோது மானுடவியலில் பி.எச்.டி பண்ணலாம் என யோசித்து அதற்கான முயற்சிகளில் இறங்கினேன். மேலும் மானுட வியலில் இதுவரை யாரும் தமிழில் பி.எச்.டி செய்யவில்லை. தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் ஆராய்ச்சி மேற்கொள்ளும்போது புரிதல் நிறைய இருக்கும் என முடிவு செய்தேன். பழங்குடிகளின் பழக்கவழக்கம், பண்பாடு, கலாச்சாரம் என எல்லாவற்றையும் பார்க்கும்போதுதான் அவர்கள் பழங்குடிகளா இல்லையா என்பதையே அறிய முடியும். இதற்காக சங்க இலக்கியத்தில் துவங்கி நவீன காலம் வரை எடுக்க வேண்டியது இருந்தது. சிலர் இதற்கு பத்து ஆண்டுகளாவது எடுக்கும் எனப் பயமுறுத்தினார்கள். இருந்தாலும் என் நம்பிக்கையை நான் கைவிடவில்லை. “சமூக உருவாக்கத்தில் சாதிக் கலப்பும், புதிய சாதிகளின் உருவாக்கமும், சாதிகளின் தோற்றத் தொன்மங்களை மையமிட்ட நிலவரவியல் ஆய்வு” இதுவே நான் மேற்கொண்ட ஆராய்ச்சி.கலையும் அறிவியலும் இணைந்ததே மானுடவியல். ஒட்டுமொத்தத் துறையையும் மானுடவியல் தன்னுள் கொண்டது. இதிலும் பல பிரிவுகள் உள்ளது. சென்னை பல்கலைக்கழகம், தஞ்சாவூரில் தமிழக பழங்குடித் துறை, உதகையில் பழங்குடிகள் ஆய்வு மையம், பாண்டிச்சேரியில் புதுவை மொழிகள் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பாண்டிச்சேரி சென்ட்ரல் யுனிவர்சிட்டி இவைகள்தான் மானுடவியல் சார்ந்து இயங்கும் நிறுவனங்கள். ஆங்கிலேயர்கள் வருகைக்குப் பிறகுதான் மானுடவியல் துறை இங்கு காலூன்றியது எனலாம். முக்கியமாக பிரிட்டிஷ்காரர்கள் வந்தபிறகு ஆட்சியைப் பிடிக்க மக்களின் பழக்க வழக்கம், பண்பாடு, கலாச்சாரம், அவர்களின் பின்னணியை அறிய சாதி ரீதியான கணக்கெடுப்பைத் தொடங்கினார்கள். அப்போது இந்தத்துறை ஒரு பக்க பலமாக உருவானது எனச் சொல்லலாம்.நாம் எதற்கெடுத்தாலும் இங்கே சாதி சாதி என யோசித்துக் கொண்டிருக்கிறோம். இந்தத் துறைக்குள் மிகவும் ஆழமாக உள்ளே சென்றபோதுதான் நிறைய பிரச்சனைகள் வெளியில் தெரிய ஆரம்பித்தது. நம் தமிழ் சமூகம் ஒரு சாதிய சமூகமே கிடையாது. இது ஒரு குடிச் சமூகம். உலகத்தில் உள்ள எல்லா நாடுகளையுமே நாம் இங்கே குடிச் சமூகமாகத்தான் பார்க்கிறோம். ஆரியர்களின் வருகைக்குப் பிறகுதான் நம் தமிழ் சமூகம் குடிச் சமூகத்தில் இருந்து மெல்ல மெல்ல சாதியச் சமூகமாக மாறியது.சங்க காலத்தில் அகமண முறை, புறமண முறை இரண்டுமே இருந்தது. பெண் சுதந்திரமானவளாக இருந்துள்ளாள். பெண்கள் தன் விருப்பத்தை பூர்த்தி செய்யத் தானாகவே திருமணம் செய்து கொள்ளலாம். இப்போது நடக்கும் சாதிப் பிரச்சனை, ஒரே சாதிக்குள் திருமணம், ஆணவப் படுகொலை என எதுவும் இல்லாத காலம் அது. பெரும்பான்மையான பழங்குடி சமூகத்தில் பெண் தன் விருப்பத்தில் துணையை தேர்ந்தெடுத்துள்ளனர். பழங்குடி இனப் பெண் தன் கணவனை இழந்தால் கணவனின் உடன் பிறந்தவர்களையும் திருமணம் செய்துகொள்ளலாம். விரும்பினால் வேறு ஒரு ஆணையும் மணம் செய்து கொள்ளலாம் . காலமாற்றத்தினால் பெண்ணை மையமிட்டு சாதி எப்படி உருவானது, சாதி எப்படி இயங்குகிறது, குடிச் சமூகம் சாதிய சமூகமாக மாறி அதில் எவ்வாறு பல சாதியக் கலப்புகளும், புதிய சாதிகளும் உருவானது என்பதையும் உள்வாங்க முடிந்தது.நம் தமிழ் சமூகம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்கிற ஐந்திணை வேறுபாட்டில் மட்டுமே இருந்தது. குறிஞ்சி இனமக்கள் குறவர், வேடர் எனவும் முல்லை இன மக்கள் ஆயர்கள், இடையர்கள் எனவும், மருதம் மல்லர்கள் அதாவது வேளாண் தொழில் செய்பவர்கள் எனவும், நெய்தல் மீன் பிடி தொழில் செய்பவர்கள் என்றும் இனக் குழுவாக இருந்துள்ளனர். பாலை என்பது வறண்ட பகுதி. நம் தமிழ் சமூகத்தில் வறண்ட பகுதி இல்லை. எனவே இம்மக்கள் கொள்ளை அடிப்பது, வழிப்பறி செய்வது போன்ற வேலை செய்பவர்களாக இருந்துள்ளனர். பண்டம் மாற்றம் முறை மட்டுமே அப்போது புழக்கத்தில்  இருந்தது. குறிஞ்சியில் தேன் கிடைத்தால் அதைக் கொடுத்து முல்லையில் வேளாண் சமூகத்தில் இருக்கும் அரிசி, தினை இவைகளைப் பெற்றனர். இந்த இனக் குழுக்கள் எல்லாம் தொழில் சார்ந்து கொல்லர், தச்சர், உழவர் என இருந்தவர்கள், ஆரியர் வருகைக்கு பின் அவர்களின் தாக்கத்தால், தொழில் பிரிவில் இருந்த சாதிய சமூகம் இன்னும் இறுக்கமாகி சாதிய அமைப்பாக மாற்றப்பட்டு மேலும் கட்டி காக்கப்பட்டது.சங்க காலம், களப்பிரர்கள் காலம், பல்லவர்கள் காலம், சோழர் காலம், பாண்டியர் காலம், விஜய நகரப் பேரரசு காலம், பிரிட்டிஷ் காலம் எனத் தொடர்ந்த ஆய்வில், இந்தந்த காலகட்டத்தில் எவ்வளவு சாதி கலந்தது… எத்தனை புதிய சாதிகள் உருவானது என்பதையும் அறிய முடிந்தது. குறிப்பாக சோழப் பேரரசு காலத்தில்தான் நிறைய சாதிய சமூகம் உருவாகியுள்ளது. ஆங்கிலேயர்களின் வருகையின்போது தங்கள் நாட்டில் இருந்து பெண்களை அழைத்துவர இயலாமல், இங்கிருக்கும் பெண்களோடு கலந்து குழந்தை பெறுவது, அதன் மூலமாகவும் புதிய சாதி உருவாக்கம் என மேலும் வளர்ந்துகொண்டே போனது. ஒவ்வொரு சாதியும் தங்கள் சாதியை ஒரு பட்டப் பெயராக மாற்ற ஒரு புராணக் கதையை உருவாக்கிக்கொள்கிறார்கள். காலப்போக்கில் மக்கள் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு, தமிழகத்தில் இருந்து ஆந்திராவிற்கும் புலம்பெயரும்போது தங்களை உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொள்ள அந்தப் பட்டப் பெயர்களை உயர்வாகப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். ஆரியர்கள் வருகைக்கு பிறகுதான் சாதியக் கட்டமைப்பு இங்கே அழுத்தமாக வேறூன்றி, சாதியின் பெயரால் மக்கள் ஊருக்கு வெளியே புறம் தள்ளப்படுகிறார்கள். தீண்டாமை இங்கே அதிகமாகிறது. இனக் குழுவாக இருந்த மக்களுக்குள் பிரிவினை உருவானதை வரலாறு நெடுகிலும் காண முடிகிறது. பல நூறு ஆண்டுகள் கழித்து இன்றும் தொடரும் கண்ணுக்குத் தெரியாத இந்த அமைப்பு… அதன் உளவியல்… வெளியில் தெரியாத மறைமுகப் பொருள்… நோய் மாதிரி மனிதனை எப்படி எல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்பதை பண்பாட்டுத் தளம், அரசியல் தளம், பொருளாதாரத் தளத்திலும் ஒட்டு மொத்தமாகப் பார்க்க வேண்டியது உள்ளது’’ என முடித்தார்.– மகேஸ்வரி

You may also like

Leave a Comment

18 − eighteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi