மாநில விளையாட்டு போட்டியில் நம்மாழ்வார் வேளாண் கல்லூரி சாதனை

கமுதி, ஜூலை 22: கமுதி அருகே வேளாண் கல்லூரிகளுக்கு இடையே மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் நம்மாழ்வார் வேளாண் கல்லூரி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. கமுதி அருகே பேரையூர் பகுதியில் உள்ள நம்மாழ்வார் வேளாண் தொழில் நுட்ப கல்லூரியில், வேளாண் கல்லூரிகளுக்கு இடையே மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. கடந்த 14ம் தேதி துவங்கிய இந்தப் போட்டியில், சென்னை,நாமக்கல், ஈரோடு, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 15 வேளாண் கல்லூரி மாணவ,மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் இந்த விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றனர்.

இதில் கிரிக்கெட், வாலிபால்,சிலம்பம், கால்பந்து, கேரம், செஸ், பூப்பந்தாட்டம், கபடி,டேபிள் டென்னிஸ் உட்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். கொளுத்தும் வெயில் என்று கூட பார்க்காமல் மாணவ,மாணவிகள் அசராமல் விளையாடி சாதனை படைத்தனர். தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டிகளில், நம்மாழ்வார் வேளாண் கல்லூரி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. நம்மாழ்வார் கல்லூரி மாணவர்கள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றனர்.

மேலும் இக்கல்லூரி கபடி மற்றும் பூப்பந்தாட்டம் போட்டியில், ஆண்கள் பிரிவு மற்றும் பெண்கள் பிரிவில் வெற்றி பெற்றனர். வாலிபால் போட்டியில் பெண்கள் பிரிவு இரண்டாம் இடம் பெற்றனர்.இதேபோல் மற்ற போட்டிகளில் பல்வேறு கல்லூரி மாணவ,மாணவிகள் வெற்றி பெற்றனர். இப்போட்டியின் நிறைவு விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் அகமது யாசின் தலைமை தாங்கினார்.

முதுகுளத்தூர் இன்ஸ்பெக்டர் இளவரசு, கல்லூரியின் முதல்வர் ஜெயக்குமார், துணை முதல்வர் திருவேணி, ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் அய்யனார் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். வெற்றி பெற்ற அனைத்து அணியினருக்கும் சுழற் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. கல்லூரி உடற்கல்வி இயக்குனர் நரேஷ் மற்றும் ஆசிரியர் நவீன் ஆகியோர் போட்டிகளை ஒருங்கிணைப்பு செய்து நடத்தினர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை