மாநில வளர்ச்சி கொள்கை குழுவினர் முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனை: தலைமை செயலகத்தில் நடந்தது

சென்னை: புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாநில வளர்ச்சி கொள்கை குழுவினர் தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் மாநில திட்டக்குழு, கலைஞரால், 1971ம் ஆண்டு மே மாதம் 25ம் தேதி ஏற்படுத்தப்பட்டது. மாநில திட்டக்குழு, முதலமைச்சரின் தலைமையின் கீழ் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு, மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்து வந்தது. மாநில திட்டக் குழு துணை தலைவரின் கீழ் வளர்ச்சி சார்ந்த முக்கிய துறைகளின் நிபுணர்களை உறுப்பினர்களாக கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வந்தது. மாநில திட்டக்குழுவானது, கடந்த 23.4.2020ல் ‘மாநில வளர்ச்சி கொள்கை குழுவாக’ மறுசீரமைப்பு செய்யப்பட்டு, அதன் இன்றியமையாத பணிகளான இலக்கு நிர்ணயிப்பது, கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் கொள்கைக்கான ஆலோசனை வழங்குதல், கொள்கை ஒத்திசைவு உருவாக்குதல், சிறப்பு திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.இந்தநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில வளர்ச்சி கொள்கை குழுவை திருத்தியமைத்து நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் துணை தலைவராகவும், பேராசிரியர். ராம.சீனுவாசன் முழுநேர உறுப்பினராகவும், பேராசிரியர் ம.விஜயபாஸ்கர், பேராசிரியர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், மு.தீனபந்து ஐ.ஏ.எஸ் (ஓய்வு), டி.ஆர்.பி.ராஜா (மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர்), மல்லிகா சீனிவாசன், ஜோ.அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு.சிவராமன்,  நர்த்தகி நடராஜ் உள்ளிட்டோர் பகுதி நேர உறுப்பினர்களாகவும் நியமனம் செய்து அறிவித்தார். இந்த 9 பேர் அடங்கிய மாநில வளர்ச்சி கொள்கை குழுவினர் நேற்று காலை 11 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினர். சிறிது நேரம் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு, மாநில வளர்ச்சி கொள்கை குழுவினர், சென்னை எழிலகம் சென்று மாநில வளர்ச்சி பணிகள் குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தினர்.9 பேரின் பணிகள்மாநில வளர்ச்சி கொள்கை குழுவில் இடம் பெற்றுள்ள 9 பேர் எந்தெந்த துறையில், எப்படி வளர்ச்சியை ஏற்படுத்தலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தி அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளனர். அதன்படி, குழுவின் தலைவர் ஜெயரஞ்சன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் விவசாய கொள்கை மற்றும் திட்டப்பணிகள் குறித்தும், ஆர்.சீனிவாசன் – திட்ட ஒருங்கிணைப்பு, எம்.விஜயபாஸ்கர் – கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, சுல்தான் அஹ்மத் இஸ்மாயில் – நில பயன்பாடு, தீனபந்து – ஊரக மேம்பாடு மற்றும் மாவட்ட திட்டம், மல்லினா சீனிவாசன் – தொழிற்சாலைகள், மின்சாரம் மற்றும் போக்குவரத்து, சிவராமன் மற்றும் நர்த்தகி நடராஜ் ஆகியோர் சுகாதாரம் மற்றும் சமூகநலன் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க திட்டமிட்டுள்ளனர்….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்