மாநில செஸ் போட்டியில் அரசு பள்ளி மாணவிகள் சாதனை

மேலூர், ஏப். 30: மேலூர் அருகே அரசு பள்ளி மாணவி மாநில அளவிலான செஸ் போட்டியில் 2ம் இடம் பிடித்த சாதனை படைத்துள்ளார். மாநில அளவிலான செஸ் போட்டி, மதுரையில் உள்ள தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லூரியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இப்போட்டியில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டனர். 8 வயது பிரிவு, 11 வயது, 14 வயது மற்றும் ஓபன் ஆகிய பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இப்போட்டியில் மேலூர் ஒன்றியம் அ.செட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் 5ம் வகுப்பு மாணவி வேதாஸ்ரீ 2ம் இடம் பிடித்தார். 8 வயதுக்கு உட்பட்டோருக்கான மாணவிகள் பிரிவில் அதே பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும் இஸ்பா டுஜானா 4ம் இடம் பெற்றார். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ்கள், கோப்பை வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவிகளை அ.செட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலை, பயிற்சி அளித்த இடைநிலை ஆசிரியர் ஞா.செந்தில்குமார், அ.வல்லாளப்பட்டி சேர்மன் குமரன், கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி