மாநில அந்தஸ்துக்காக வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜ கூட்டணிக்கு ரங்கசாமி செக் வைப்பாரா?  14 முறை தீர்மானம் நிறைவேற்றியும் பலன் இல்லை  பொதுமக்கள் எதிர்பார்ப்பு

புதுச்சேரி, டிச. 30: புதுவை நாடாளுமன்ற தேர்தலில், பாஜ கூட்டணியில் தொடர மாநில அந்தஸ்து நிபந்தனையை ரங்கசாமி விதிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசியல் நோக்கர்கள் வலியுறுத்துகின்றனர். முதல்வர் ரங்கசாமியின் 40 ஆண்டு கனவை நினைவாக்க இதுதான் சரியான நேரமாகும், என்றும் கூறுகின்றனர். புதுச்சேரியில் 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, பாஜவுடன் கூட்டணி அமைத்தார். அப்போது பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து அவர் பேசுகையில், மத்தியில் பாஜ தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. புதுச்சேரிக்கான தொலை நோக்கு திட்டங்களை எளிதில் கேட்டு பெறலாம். நிதி தட்டுப்பாடு ஏற்படாது. பொருளாதாரத்தில் புதுச்சேரி வளரும். முக்கியமாக மக்களின் நீண்ட நாள் ேகாரிக்கையான மாநில அந்தஸ்து கிடைத்துவிடும். மாநில அந்தஸ்து என்பது எனது நீண்ட நாள் கனவாகும். அது எனது ஆட்சி காலத்திலேயே நடக்க வேண்டும் என்பது எனது ஆசை. எனவே என்.ஆர்.காங்கிரஸ் பாஜ கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும், எனக்கூறி கூட்டங்களில் பேசி வாக்குசேகரித்தார்.

அதனைதொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் பாஜ கூட்டணி ஆட்சி பெரும்பான்மையை பெற்றது. ரங்கசாமி தலைமையில் கூட்டணி அமைச்சரவை பதவியேற்றது. தொடர்ந்து நடந்த பல அரசு விழாக்களிலும் மாநில அந்தஸ்தை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தார். முதல்வர் ரங்கசாமி டெல்லி சென்றபோது ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து இது குறித்து வலியுறுத்தி உள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது அனைத்து கட்சி எம்எல்ஏக்களும் ஒருமித்த குரலில் பேசினர். கடந்த 36 ஆண்டுகளில், 13 முறை மாநில அந்தஸ்து கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், மத்திய அரசு நிராகரித்து வந்துள்ளது. மக்கள் பிரதிநிதிகளான முதல்வர், அமைச்சர்கள் முடிவு எடுக்காமல், தலைமைச் செயலர், ஆளுநர் ஆகியோர் முடிவு எடுக்கும் நிலை உள்ளது.

பெரும்பாலான கோப்புகள் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்படுவதால், அரசின் அதிகாரம் குறைந்துள்ளது. எனவே, மாநில அந்தஸ்தை அரசு தீர்மானமாக கொண்டுவர வேண்டும் என ஆளும்கட்சியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ், பாஜ, எதிர்க்கட்சியை சேர்ந்த திமுக, காங்கிரஸ், சுயேட்சை எம்எல்ஏக்கள் பேசினர். இதற்கு மாகே, ஏனாம் எம்எல்ஏக்களும் ஆதரவு தெரிவித்தனர். இதனிடையே புதுவை சட்டசபையில் மாநில அந்தஸ்து தீர்மானம் அனைத்துக்கட்சி ஆதரவுடன் 14வது முறையாக ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்ப காலதாமதமானது. இதற்கு கவர்னர் தான் காரணம் என்று அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால் கடந்த ஜூலை 22ம் தேதி இந்த தீர்மானம் கவர்னர் மாளிகைக்கு வந்ததாகவும், விடுமுறை தினமாக இருந்தபோதிலும் 23ம் தேதி கையெழுத்திட்டு அதற்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துவிட்டதாக கவர்னர் மாளிகை விளக்கம் அளித்தது.

இவ்வாறு பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே மாநில அந்தஸ்து தொடர்பான மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தநிலையில் புதுவை அரசின் தீர்மானத்துக்கு பதில் அளித்து மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது மாநில அந்தஸ்து கிடையாது, புதுவை யூனியன் பிரதேசமாகவே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த பதில் புதுவை ஆட்சியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் 4 மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. புதுச்சேரி ராஜ்ய சபா சீட்டை என்.ஆர்.காங்கிரசிடம் இருந்து தட்டி பறித்த பாஜ, மக்களவை சீட்டையும் ரங்கசாமியிடம் கேட்டு பெற்று போட்டியிடுவோம் என கூறி, அதற்காக வேட்பாளர் தேர்வை நடத்தி வருகிறது.

ஆனால் இதுவரை நாடாளுமன்ற சீட், பாஜவுக்கு ஒதுக்கிவிட்டதாக ரங்கசாமி அறிவிக்கவும் இல்லை. அவரிடம் இதுவரை பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை. ஆனால் தன்னிச்சையாக பாஜ செயல்பட்டு வருகிறது. அதிகாரப்பூர்வமாக பாஜ தலைமை, ரங்கசாமியுடன் பேச்சு நடத்தும். அப்போது புதுவை நாடாமன்ற சீட்டை பாஜவுக்கு ஒதுக்க வேண்டும் என ஆதரவு கேட்கும். அப்போது புதுவைக்கு மாநில அந்தஸ்து உடனடியாக வழங்கினால் பாஜவுக்கு என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவு தரும் என ரங்கசாமி உறுதியாக அவர்களிடம் கூற வேண்டும். அப்போது தான் ரங்கசாமியின் கனவு நனவாகும் என கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

இது குறித்து என்.ஆர்.காங்கிரஸ் மூத்த நிர்வாகி கூறுகையில், பாஜவுடன் சேர்ந்து ஆட்சி செய்வதில் ரங்கசாமி நொந்து தான் உள்ளார். வெளியே சொல்ல முடியவில்லை. அவரது கனவான மாநில அந்தஸ்து நிறைவேறவில்லை. போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய மேம்பாலங்கள் திட்டம், கடற்கரையொட்டி புதுவை இருப்பதால் நிலத்தடி நீர் பாதுகாக்க நடவடிக்கை இல்லை. சிலிண்டர் மானியம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் திட்டமும் நிதியில்லாமல் கிடப்பில் கிடக்கிறது. பல புதிய திட்டங்கள் அறிவிப்போடு நின்றுவிட்டது. எனவே மாநில அந்தஸ்து கொடுத்தால் தான் நாடாளுமன்றத்தில் பாஜவுடன் கூட்டணிக்கு ரங்கசாமி துணிச்சலாக அறிவிக்க வேண்டும். அப்படி அறிவித்தால் மாநில மக்கள் அவரது பின்னால் நிற்பார்கள், என்றார். இந்தாண்டும் முடிந்துவிட்டதுஒன்றிய அரசு அறிவிப்பை தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி கருத்து கூறுகையில், “நமது உரிமை நிலைபெற, மாநில அந்தஸ்து பெறுவது அவசியம். எனவே, எம்எல்ஏக்கள் அனைவரையும் டெல்லி அழைத்துச் சென்று, பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர்களைச் சந்தித்துப் பேசி, இந்த ஆண்டுக்குள் மாநில அந்தஸ்து பெறுவோம்” என்றார். இந்தாண்டும் முடிந்துவிட்டது. ஆனால் அதற்கான சிறு முயற்சிகளும் இல்லை.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்