மாநகர பேருந்தில் ₹200 கொடுத்து டிக்கெட் கேட்ட பயணியை தாக்கிய கண்டக்டர்:  தாம்பரம் அருகே பரபரப்பு  சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

தாம்பரம், ஆக.8: நெல்லை மாவட்டம், பாவூர்சத்திரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஊரப்பாக்கத்தில் தங்கி சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று நெல்லையில் இருந்து ரயில் மூலம் தாம்பரம் வந்து, ஊரப்பாக்கத்தில் தங்கி இருக்கும் அறைக்கு செல்வதற்காக தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மாநகர பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது, மாநகர பேருந்து கண்டக்டரிடம் ஊரப்பாக்கம் செல்ல வேண்டும் எனக்கூறி 200 ரூபாய் கொடுத்து டிக்கெட் கேட்டபோது, சில்லரை இல்லை எனக்கூறிய கண்டக்டர் டிக்கெட் கொடுக்க மறுத்துள்ளார். தன்னிடம் வேறு பணம் இல்லை. 200 ரூபாய் தான் இருக்கிறது என அந்த இளைஞர் நீண்ட நேரம் டிக்கெட் கேட்டபடி வந்துள்ளார்.

அதற்குள், ஊரப்பாக்கம் நிறுத்தம் அருகே பேருந்து வந்ததால் மீண்டும் 200 ரூபாய் பணத்தை கொடுத்து, அந்த இளைஞர் டிக்கெட் கொடுங்கள் என கேட்டபோது ஆத்திரமடைந்த கண்டக்டர், அந்த இளைஞரை தகாத வார்த்தைகளால் ஆபாசமாக பேசி தாக்கி உள்ளார். இதைக்கண்ட சக பயணிகள், வேறு பணம் இல்லாததால் தானே அவர் 200 ரூபாய் பணத்தை கொடுத்து டிக்கெட் கேட்கிறார். அதற்கு எப்படி அவரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்குவீர்கள் என கடுமையாக கண்டித்துள்ளனர். இந்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்த அந்த இளைஞர், சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும், கண்டக்டரின் செயலுக்கு ஏராளமானோர் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

Related posts

முன்னாள் ராணுவவீரர் வீட்டில் 15 சவரன் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை குடியாத்தத்தில் துணிகரம்

இன்ஸ்டாகிராமில் பழகிய சிறுமிக்காக மல்லுக்கட்டிய 2 வாலிபர்கள் மோதலில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்கு ஒடுகத்தூர் அருகே பரபரப்பு

உயர்அழுத்த மின்கம்பி மீது உரசிய ரயில்வே கம்பத்தால் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம் பயணிகள் அவதி வேலூரில் லாரி மோதியதால்