மாநகரில் 53 கி.மீ., சாலைகள் ₹17.71 கோடியில் சீரமைப்பு

சேலம், ஜூன் 27: சேலம் மாநகரில் பாதாள சாக்கடை, தனிகுடிநீர் திட்டகுழாய் பதிக்கும் பணி, இயற்கை இடர்பாடுகளால் சேதமடைந்த 53 கிலோமீட்டர் தூரம் கொண்ட சாலைகள் ₹17கோடியே 71 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்படுகிறது. மாநகராட்சி மன்ற கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி 60 வார்டுகளில் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சேலத்தை பொறுத்தமட்டில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைக்கப்பட்ட சாலையே இன்றும் பயன்பாட்டில் உள்ளது. ஏற்கனவே இருக்கும் சாலைகளை வணிக நிறுவனங்கள், சாலையோர வியாபாரிகள் ஆக்ரமித்துள்ளனர். அம்மாப்பேட்டை, குகை, வின்சென்ட், தாதகாப்பட்டி, ெபான்னம்மாப்பேட்டை, 5 ரோடு உள்ளிட்ட பகுதிகளில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை போக்க ஓமலூர் மெயின் ரோடு, சாரதா கல்லூரி சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த மேம்பாலம் அமைத்த பிறகும் போக்குவரத்து நெரிசல் போகவில்லை.

இந்த நிலையில் சேலம் மாநகராட்சி பகுதிக்கு மேட்டூரில் குடிநீர் எடுத்து விநியோகம் செய்யப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு ஆத்தூர் பகுதி மக்கள் எங்களுக்கும் மேட்டூர் குடிநீர் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் சேலத்தில் இருந்து ஆத்தூர் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆத்தூர் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டபின், சேலம் மாநகராட்சி பகுதியில் குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2008ம் ஆண்டு காலவாக்கில் சேலம்-மேட்டூர் தனிக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் ₹285 கோடியில் உருவாக்கப்பட்டது.

இதற்காக சேலம் மாநகர் மற்றும் புறநகரில் பல்வேறு இடங்களில் குழித்தோண்டி குழாய் பதிக்கப்பட்டது. இதனால் பல கிலோமீட்டர் தூரம் சாலைகள் தேசமடைந்தது. அதன்பின்பு, சேலம் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்திற்கு சேலம் மாநகரில் உள்ள 95 சதவீதம் சாலைகளில் குழாய் பதிப்பதற்காக குழித்தோண்டப்பட்டது. இதை அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கிடப்பில் ேபாட்டது. இவ்வாறு குழித்தோண்டப்பட்ட இடங்களில் இன்னும் பல சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளது. 14 ஆண்டுகளுக்கு மேலாகியும் இத்திட்டம் இன்னும் நிறைவு பெறாமல் உள்ளது.

தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்தை தினசரி வலியுறுத்தி வருகின்றனர்.திட்டப்பணிகளால் சேதமடைந்த சாலைகளை துரிதக்கதியில் சீர் செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தினர். இதையடுத்து இதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘தமிழ்நாடு நகர்புற சாலை உட்கட்டமைப்பு திட்ட நிதியின் கீழ், சேலம் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம், தனிகுடிநீர் திட்ட குழாய், இயற்கை இடர்பாடுகளால் சேதமடைந்த சாலைகள், மழைநீர் வடிகால் பணி மற்றும் சிறுபாலம் அமைக்க 21 சிப்பங்கள் உள்ளிடக்கிய 368 பணிகள் 53 கிலோமீட்டர் நீளத்திற்கு ₹17 கோடியே 71 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பில் பணிகள் மேற்கொள்ள விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. திட்ட அறிக்கையின் மீது உரிய நிர்வாக அனுமதி வழங்கக்கோரி கடந்த மே மாதம் நகராட்சி நிர்வாக இயக்குனகரம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதற்கான தீர்மானம் நேற்று நடந்த மாமன்றத்தில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கான பணி விரைவில் தொடங்கப்படும்,’’ என்றனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்