மாநகராட்சி மக்கள் குறைதீர்ப்பு முகாம் மேயரிடம் 52 மனுக்கள் அளிப்பு

 

கோவை, ஆக. 9: கோவை மாநகராட்சி சார்பில் வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு முகாம், மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேற்று நடந்தது. மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப், துணை மேயர் வெற்றிசெல்வன், துணை கமிஷனர்கள் சிவகுமார், செல்வசுரபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாலை வசதி, மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்த மனுக்களை பொதுமக்கள், மேயரிடம் அளித்தனர்.

கிழக்கு மண்டலத்தில் 7 மனு, மேற்கு மண்டலத்தில் 11 மனு, வடக்கு மண்டலத்தில் 10 மனு, தெற்கு மண்டலத்தில் 4 மனு, மத்திய மண்டலத்தில் 17 மனு, மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 3 மனு என மொத்தம் 52 மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர், இம்மனுக்களின் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முகாமில், உதவி கமிஷனர்கள் செந்தில்குமார், ரத்தினம், சுந்தர்ராஜ், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி நகரமைப்பு அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் உள்பட மாநகராட்சி அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Related posts

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

மணல் சிற்பத்தில் புதுவை; ஆயி மண்டபம், முதல்வர் முகம்

பெண்ணிடம் கந்துவட்டி கொடுமை வீட்டை பூட்டி வெளியேற்றிய அவலம்