மாதங்களில் மார்கழி

இறைச்சுவை இனிக்கும் இலயக்கியத்தேன்-60திங்கள் என்ற சொல்லிற்குத் தமிழில் இருபொருள் உண்டு. ஒன்று : சந்திரன்இன்னொன்று : மாதம். ஏன்? சந்திரனையும், மாதத்தையும் ஒரே சொல்லில் குறித்தார்கள் என்றால் பௌர்ணமி சந்திரன் ஒளிவீசும் நாளுக்குரிய நட்சத்திரம்தான் மாதங்களுக்குப் பெயராகவே அமைந்தது.சித்திரை விண்மீனில் முழுநிலா வரும் மாதம் சித்திரை  மாதம். விசாக  நட்சத்திரத்தில் வெண்ணிலா வரும்  மாதம் வைகாசி மாதம். இம்முறையில் பௌர்ணமியும் மிருக  சீர்ஷமும் சேர்ந்தது மார்கழி!வெப்பம் மிகுந்த நம் நாட்டிற்குக் குளிர்ந்த பனியைத்  தருகிற இம்மாதம்ஒரு ‘விழா மாதம்’ என்றால் அதில் வியப்பென்ன இருக்கிறது? இம்மார்கழி மாதம் அதிகாலையிலேயே நாம் எழுந்துவிடுகிறோம்! நாம்  மட்டுமல்ல!  தேவர்களும் எழுந்து தெய்வ தரிசனம் பெறுகிறார்கள்!எப்படி என்கிறீர்களா? தை  முதல் நாள் முதல் உத்ராயணம் என்கிற பகல்பொழுது தேவர்களுக்கு! அப்படியானால் அதற்குமுன் வருகிற இம்மார்கழி தேவர்களுக்கு அருணோதய நேரம் தானே!விண்ணுலகினர் அதிகாலை எழுந்து ஆண்டவனை வழிபடும் அதே நேரம் மண்ணுலகினரும் மகாதேவனை வழிபடும் மாதமே மார்கழி மாதம்!  இறைவனை வழிபடுவதுதான் சாலச்சிறந்தது!‘கற்றதனால் ஆயபயன் என்கொல்?  வாலறிவன் நற்றாள் தொழார் எனின்’என்கிறார் தெய்வப்புலவர்.கல்வியின் பயன் கடவுளைத் தொழுதல்! செல்வத்தின் பயன் என்ன? அடுத்தவர்களுக்கு வழங்குதல்!‘செல்வத்தின் பயனே ஈதல்’ என்கிறார் சங்கப்புலவர்.அதைத்தான் ஆண்டாள் அற்புதமாகத் திருப்பாவையில்‘ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டிஉய்யுமா றெண்ணி உகந்தேலோ  ரெம்பாவாய்’ எனப் பாடுகிறார்.கல்வியும், செல்வமும் உரிய பயன் பெறுகிற இம்மாதத்தின் மகிமையை எண்ணி எண்ணி மகிழ வேண்டும்! அதனால்தான் பரந்தாமன் தான் அருளிச்செய்த ‘ஸ்ரீபகவத் கீதையில் பத்தாவது அத்தியாயத்தில் 35-வது ஸ்லோகத்தில் ‘மாஸானாம் மார்கசீர்ஷோஹம்’ என்கிறார்.  அதாவது ‘மாதங்களில் நான் மகிமைமிக்க மார்கழியாகத் திகழ்கிறேன்’ என்கிறார்.ஆண்டாள் மார்கழி முழுவதும் பாட ஒரு மகத்தான  கீதம் தந்தார். அதுவே திருப்பாவை !அத்திருப்பாவை தந்த திருப்பாவை போலவே மாணிக்கவாசகர் திருவெம்பாவை தந்தார்.இந்த இரு ‘பாவை’களின் மூலமாகத்தான் நாம் பக்தி உலகத்தையே  பார்க்க முடிகிறது.‘மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழைநீர் !’என்று ஆண்டாள் ஆரம்பிக்கிறார்.மாணிக்கவாசகரோ‘போற்றியாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்!’என முத்தாய்ப்பு வைக்கிறார்.நாம் இம்மாதத்தில் வீதிகளை விளங்கவைக்கும் விசாலமாக கோலம் போடுகிறோம். அந்தக் கோலம் மேலும் கோலாகலம் பெற பூசணிப்பூவை இடையில் பொலிய வைக்கிறோம். அதிகாலை குளிக்கிறோம். ஆண்டவன் நினைவில் களிக்கிறோம். அவனைப் போற்றி அடியார்களுக்குத் தருமம் அளிக்கிறோம் !நாம் செய்யும் வழிபாடு  நம்மைக் கடவுள்  இருக்கும் இடத்தின் பாதி தூரம் வரைதான் அழைத்துச் செல்லும்.நாம் கடைப்பிடிக்கும் நோன்பும், விரதமும் நம்மைத் தெய்வ சந்நிதானத்தின் கதவு வரை இட்டுச் செல்லும்.நாம் செய்யும் தருமமோ நம்மைக் கடவுள் இடத்திலேயே அமரவைக்கும்.இந்த மூன்றுமே மார்கழி வழிபாட்டில் சங்கமம் ஆவதால்தான் மார்கழி மகிமை மிக்க மாதமாக மலர்கிறது.இப்படியிருக்க இம்மாதத்தைச் சிலபேர் பீடைமாதம் என ஏன் பேசுகின்றனர்?‘தை  பிறந்தால் வழி பிறக்கும்!’ என அடுத்து வரும் மாதத்தை ஏன் அற்புதமாக வரவேற்கின்றனர்? இதற்கான காரணத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டாமா? உண்மையில் இம்மார்கழி மாதம் பீடு உடை மாதம்! பீடை மாதம் அன்று!சிவநெறியாளர்கட்குக் கோயில் என்றாலே சிதம்பரம்தான்!திருமால் நேயர்கட்கோ  கோயில் என்றாலே  ஸ்ரீரங்கம்தான்!சிதம்பரத்தின் சிறந்த திருவிழா திருவாதிரை நன்னாள் என்னும் ஆருத்ரா தரிசனம்தான்! ஸ்ரீரங்கத்தின் சிறப்பு  வைபவம் வைகுண்ட  ஏகாதசிதான் !  பத்ம  புராணம் 25 ஏகாதசிகளில் முதலில் குறிப்பிடுவது இந்த மார்கழி ஏகாதசியையே !நாம் இம் மாதத்தின் முப்பது நாட்களும் கடவுள் நினைவாகவே இருக்கிறோம். வீட்டுக் கொண்டாட்டங்களை விட்டுவிட்டு இறைவனையே சிக்கெனப் பற்றிக்கொள்வதால் தான். சீக்கிரத்தில் அதாவது  அடுத்த மாதத்தின்  ஆரம்பத்திலேயே நமக்கு வழி பிறக்கிறது. எனவே ‘தைபிறந்தால் வழி பிறக்கும்’ என்பது அம்மாதத்திற்குரிய பெருமை அல்ல என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்!ஒரு சின்ன உதாரணம் மூலம் இதைச்  சிறப்பாக விளங்கிக்கொள்வோம்.ஒரு பெரிய மரத்தை வெட்ட வேண்டியிருக்கிறது. ஒருவன் ஒரே இடத்தில் கோடாரியினால் 9 முறை வெட்டியும் மரம் விழவில்லை. அடுத்தவன் வந்து அதே இடத்தில் ஒரு போடு போடுகிறான். மரம் கீழே சாய்கிறது. மரத்தைச் சாய்த்த பெருமை பின்னவனுக்கா? முன்னவனுக்குத் தானே!அதே மாதிரிதான் மார்கழி நோன்பின்  மகத்துவத்தால்தான் தை பிறந்தால் வழி பிறக்கிறது எனத் தேர்வோம்!  தெளிவோம்!  நாடு சிறக்க நல்ல மழை பொழிய வேண்டும். வீடு சிறக்க நல்ல நாயகன் அமையவேண்டும் என்று கன்னிப்  பெண்கள் அதிகாலை எழுந்து ஆண்டவனை வேண்டி நோன்பு நோற்பதாக அமைந்தவையே பாவைப் பாடல்கள் ! மார்கழியில் பாடும் பாடல்கள்!பாதகங்கள்  தீர்க்கும்!  பரமன் அடிகாட்டும் !வேதம் அனைத்திற்கும் வித்தாகும்! என ஆண்டாளின் பாடல்கள் போற்றப்படுகின்றன!தொல்லை இரும்பிறவி சூழும் தளைநீக்கிஅல்லல் அறுத்து ஆனந்தமாக்கியதே!என மாணிக்கவாசகரின் பாடல்கள் வரவேற்கப் படுகின்றன.இந்த இரு தமிழ் வேதங்களையும் மார்கழியில் தவறாமல் அதிகாலையில் ஓதுவோம். இந்தப் பனிமாதம் முழுவதும் இறைவனை பணி மாதமாகவேகொண்டு காலையில் எழுவது விஞ்ஞான ரீதியாகவும் விளக்கம் பெறுகிறது. எப்படியெனில் ‘ஓசோன்’ என்னும் ஆக்சிஜன் நிறைந்த படலம் சற்றே தாழ்வாக அமைவதால் அதிகாலையில் எழுவது அதிகப்பலன் நல்குகிறது.‘ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்யும். நீங்காத செல்வம் நிறையும்’ என ஆண்டாள் ஆணையிட்டுச் சொல்கிறார்.‘நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்வோம்!  என்ன குறையும் இலோம்!’ என மாணிக்கவாசகர் மனங்குளிர்ந்து பேசுகிறார்!இது மகிமை மிக்க  மார்கழி மாதம்! –  இதில்தினம் ஓதுவோம் பாவை  கீதம்!அன்பாய்ப் பணிவோம் ஆண்டவன்  பாதம்!   நாம் அனைவரும் பெறுவோம் ஆன்ம போதம்! (தொடரும்)திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்…

Related posts

சிலர் வீடுகளில் ஸ்டிக்கர் கோலம் ஒட்டி இருப்பது சரிதானா?

துலாம் ராசி குழந்தை

ஜாதகத்தில் விவாகரத்தை கண்டுபிடிக்க முடியுமா?