மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ‘சில்மிஷ’ சாமியார் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு!!

சென்னை: பள்ளிகளில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு வழக்குகள் பதிவு செய்து செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிவசங்கர் பாபாவை புழல் சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் சிவசங்கர் பாபா தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்ட இரண்டு ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவையும் நீதிபதிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதேபோல், மேலும் ஓரு வழக்கில் உடல்நிலையை காரணம் காட்டி ஜாமீன் கோரிய மனுவும் தள்ளுபடியானது. இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரியும் சிவசங்கர் பாபா மேல்முறையீடு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிவசங்கர் பாபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘ சிவசங்கர் பாபா பல நாட்களாக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். அவருக்கு ஏற்கனவே ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வயது மூப்பால் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சிவசங்கர் பாபாவுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்,’என்று கோரிக்கை வைத்தார். இதைத் தொடர்ந்து ஆஜரான தமிழக காவல்துறை தரப்பு வழக்கறிஞர், ‘ பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபா குற்றவாளி என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளது. அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை அழிக்க வாய்ப்பு உள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது,’என்று  கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தனர். எனினும் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்கலாமா என்பது குறித்து தமிழக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர். இந்த நோட்டீஸிற்கு தமிழக காவல்துறை பதில் அளித்த பிறகு மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரும். …

Related posts

ஹமாஸ், ஹிஸ்புல்லா தலைவர்கள் அடுத்தடுத்து படுகொலை ஈரான் – இஸ்ரேல் போர் மூளும் அபாயம்: மத்திய கிழக்கு நோக்கி நகரும் அமெரிக்க போர்க்கப்பல்கள்

வயநாடு பேரழிவை சந்தித்த பின்பும் தேசிய பேரிடராக அறிவிக்காமல் இழுத்தடிப்பு: ஒன்றிய அரசின் மெத்தனத்துக்கு கேரளா கண்டனம்; நிலச்சரிவில் சிக்கிய 300 பேரின் கதி என்ன?

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு; உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சிராக் பஸ்வான் மேல்முறையீடு?