மாணவர் மன்றத்தில் சேர 6,018 பேர் பதிவு

தர்மபுரி, ஆக.9: தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் முன்னாள் மாணவர்கள் மன்றத்தில் சேர 6018 பேர் பதிவு செய்துள்ளனர். மேலும் பதிவு செய்ய வரும் 31ம் தேதி வரை கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி 832, நடுநிலைப்பள்ளி 322, உயர்நிலைப்பள்ளி 118, மேல்நிலைப்பள்ளி 107 என மொத்தம் 1379 அரசு பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 2 லட்சத்திற்கு மேலாக மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இம்மாவட்டத்தில் அரசு பள்ளிகள் மற்றும் மாணவர்களின் வளர்ச்சி சார்ந்த முன்னெடுப்புகளை மேற்கொள்ள, பல்வேறு நடவடிக்கைகள் அரசு எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, அரசு பள்ளிகளில் ஏற்கனவே படித்த முன்னாள் மாணவர்களை இணைத்து செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஒவ்வொரு பள்ளிக்கும் 25பேர் அடங்கிய, முன்னாள் மாணவர் மன்றங்களை தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து ஒவ்வொரு அரசு பள்ளியின் மீதும் பொறுப்பும், நலனும் கொண்ட ஒரு பள்ளிக்கு குறைந்தப்பட்சம் 25 முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் ஆர்வமுள்ள 6018 முன்னாள் மாணவர்கள் இதுவரை பதிவு செய்துள்ளனர். இதனை மேலும் அதிகரிக்கும் வகையில், இம்மாத இறுதிவரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளியின் நலன் மீது பொறுப்புணர்வு கொண்ட 25முன்னாள் மாணவர்கள் கண்டறிந்து, கடந்த மாதம் 20ம் தேதிக்குள் அவர்களின் தகவல்களை tnschools.gov. in என்ற இணையதள பக்கத்தில் முன்னாள் மாணவர்களுக்கான படிவத்தில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்திட அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து அனைத்து மாணவர் அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைளின் முயற்சியால், இதுவரை 6018 முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளுடன் இணைந்து பயணிக்க முன்வந்துள்ளனர். இவர்களின் சிலர் இளம்பெண்கள் ஆவர். இதனால் இந்த முன்னெடுப்பில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு கூடுதல் நம்பிக்கை கிடைத்துள்ளது.

அதிகபட்சமாக விருப்பமுள்ள அனைத்து முன்னாள் மாணவர்களையும் பள்ளியுடன் ஒருங்கிணைக்கலாம். பள்ளி மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர், தலைமை ஆசிரியர் வாயிலாக முன்னாள் மாணவர்களை கண்டறியலாம். முன்னாள் மாணவர்கள் கல்லூரி செல்பவராக, பணியில் உள்ளவராக, உள்ளூர் மற்றும் வெளியூரில் இருக்க வாய்ப்பு இருப்பதால், அவர்களுக்குக் கிடைக்கும் நேரம், ஆர்வம், தனித்திறமை மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை கேட்டறிய வேண்டும். 25 முன்னாள் மாணவர்களை கண்டறிந்து, இணையதள பக்கத்தில், முன்னாள் மாணவர்களுக்கான படிவத்தில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இணையதளத்தில் மாணவர்களை பள்ளியுடன் ஒருங்கிணைக்க ஏதுவாக, இணையதளத்தில் மாணவர்களை பதிவேற்றம் செய்ய, வரும் 31ம்தேதி வரை கூடுதல காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து பள்ளிகளிலும் குறைந்தபட்சம் 25 முன்னாள் மாணவர்களை கொண்ட முன்னாள் மாணவர்கள் மன்றம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை