மாணவர் சேர்க்கைக்கு 31 வரை கால அவகாசம்

 

தர்மபுரி, ஜூலை 22: தர்மபுரி, அரூர் ஐடிஐயில் நேரடி மாணவர் சேர்க்கைக்கு வரும் 31ம் தேதிவரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தர்மபுரி, அரூர் அரசினர் ஐடிஐயில், இவ்வாண்டு வரும் ஆகஸ்ட் மாதம் சேர்க்கைக்கு முதல் மற்றும் 2ம் கட்ட சேர்க்கை நடைபெற்றது. இதில் தொழிற் பிரிவுகளில் மீதமுள்ள காலியிடங்களை நிரப்ப நேரடி சேர்க்கைக்கு, கடந்த 15ம்தேதி முதல் வரும் 31ம் தேதி வரை நடக்கிறது.

இதில் 14வயது முதல் 40 வயதிற்குட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவர். பெண்களுக்கு குறைந்தபட்ச வயது 14 உச்சவரம்பு இல்லை. 2021ல் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 9ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலின்படி பதிவேற்றம் செய்யலாம். சில தொழிற்பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். சேர்க்கைக்கு வரும் போது, அசல் கல்விச்சான்றிதழ்கள், சேர்க்கை மற்றும் விண்ணப்ப கட்டணங்களுடன் நேரில் வர வேண்டும்.

அசல் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்று, அசல் டிசி, அசல் கம்யூனிட்டி சான்று, ஆதார் அட்டை, அலைபேசி எண்கள், மார்பளவு புகைப்படம், இ-மெயில் ஐடி, விண்ணப்ப கட்டணம் ரூ.50. சேர்க்கை கட்டணம் ரூ.195, அல்லது ரூ.185. பயிற்சி காலத்தின் போது, பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகையாக வழங்கப்படும். இதை தவிர விலையில்லா பாடபுத்தகம், வரைபட கருவிகள், லேப்டாப், சீருடை, சைக்கிள், பஸ் பாஸ், காலணி வழங்கப்படும். ஆண் மற்றும் பெண் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதி உள்ளது. மேலும், மாணவிகளுக்கு மூவலூர் ராமிர்தம் அம்மையார் கல்வி உதவித்தொகை ரூ.1000, மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ், கல்வி உதவித்தொகையாக ரூ.1000 மாதந்தோறும் வழங்கப்படவுள்ளது. எனவே, தகுதியுள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி