மாணவர்கள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே உறுதிமொழி ஏற்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்.!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அம்பூர்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: இந்திய ஒன்றியத்திலேயே முதல் முறையாக, தமிழகத்தில் சித்த மருத்துவத்திற்கு என்று விரைவில் தனி பல்கலைக்கழகம் துவங்கி, சித்த மருத்துவ கல்லூரி நிறுவப்பட உள்ளது. நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 100 படுக்கைகளுடன் கூடிய சித்த மருத்துவமனை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சித்த மருத்துவமனையும், அடுத்த ஆண்டு சித்த மருத்துவ கல்லூரியும் நிச்சயம் தொடங்கப்படும். மதுரை மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்டது மிகவும் கண்டனத்திற்குரியது. ஒரு காலக்கட்டத்தில் சமஸ்கிருதம் படித்தவர்கள் மட்டுமே மருத்துவராக வேண்டும் என்ற நிலைமை இருந்தது. ஆனால் அவை அனைத்தும் இப்போது மாற்றப்பட்டுள்ளது. மாணவர்களை சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்க செய்த கல்லூரி முதல்வர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள 36 மருத்துவ கல்லூரிகளுக்கும் இதுகுறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. உறுதிமொழியை ஆங்கிலத்திலோ அல்லது தமிழில் மொழிபெயர்ப்பு செய்தோ மாணவர்களை ஏற்க செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் மட்டுமே 8 ஆயிரத்து 50 மாணவர்கள் முதலாமாண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். இதில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் 555ஆக உள்ளது. இந்த மாணவர்களுக்கு கையடக்க கணினி தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்….

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி