மாணவர்களுடன் சென்ற தனியார் பள்ளி பஸ்சில் திடீர் தீ ஆரணி அருகே பரபரப்பு பள்ளி திறந்த முதல் நாளில் அதிர்ச்சி சம்பவம்

ஆரணி, ஜூன் 11: ஆரணி அருகே மாணவர்களை ஏற்றிச்சென்ற தனியார் பள்ளி பஸ்சில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. பள்ளி திறந்த முதல் நாளிலேயே நடந்த இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளியை சேர்ந்த பஸ் நேற்று காலை படவேடு, வெள்ளூர், முள்ளிப்பட்டு, நடுக்குப்பம் கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது. தொடர்ந்து, படவேடு அடுத்த நடுக்குப்பம் அருகே ஊத்துக்காடு அம்மன் கோயில் எதிரே வந்தபோது திடீரென பஸ்சின் இன்ஜினில் இருந்து புகை வந்தது. சில நொடிகளில் பஸ் தீப்பற்றி எரிந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த டிரைவர் பஸ்சை உடனடியாக நிறுத்தினார். உடனே பஸ்சில் இருந்த 13 மாணவ, மாணவிகள் அலறியடித்தபடி பஸ்சில் இருந்து கீழே இறங்கினர்.

அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் அனைத்து மாணவர்களையும் பத்திரமாக மீட்டனர். பின்னர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையில், தகவலறிந்த ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) பூபாலன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து ேபாராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த களம்பூர் போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர், பள்ளி மாணவர்களை வேறு ஒரு வாகனத்தில் ஏற்றி பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், பள்ளி பஸ்சில் இன்ஜின் பழுதால் தீப்பற்றியது தெரியவந்தது. இதுகுறித்து, களம்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளி திறந்த முதல் நாளிலேயே தனியார் பள்ளி பஸ் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை