மாணவர்களுக்கு ஜாக்பாட்

தமிழகத்தில் அடுத்த நிதியாண்டில் மேலும் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்படுமென தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் கடந்த ஜனவரி 12ம் தேதி ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், திருப்பூர், நீலகிரி, நாகபட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய 11 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் தமிழகத்தில் சுமார் 1,450 இடங்கள் கூடுதலாக கிடைக்கின்றன. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 37 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இதன்மூலம் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர் சேர்க்கை இடங்கள் நிரப்பப்படும்.இதுமட்டுமல்லாது 15க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவக்கல்லூரிகளும் உள்ளன. ஏற்கனவே அரசு மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவ கட்டமைப்பின் அடிப்படையில் 250, 200, 150, 100 சீட்கள் என்ற கணக்கில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. ஒரு சில கல்லூரிகளில் சீட்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டுமென மாணவர்கள், பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை எழுப்பப்பட்டது. இதனடிப்படையில், சில கல்லூரிகளில் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூடுதல் மருத்துவக்கல்லூரிகள் அமையும்போது, மாணவர் சேர்க்கை மேலும் அதிகரிக்கும்.நீட் தேர்வால் தமிழகத்தில் பெரும்பாலான மாணவர்களின் டாக்டர் கனவு கேள்விக்குறியாகி உள்ளது. இதுதொடர்பாக அனிதா உட்பட ஏராளமான மாணவ, மாணவிகள் உயிரிழந்துள்ளனர். எனவே, தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய சூழலில் தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடால் அரசுப்பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவு நிறைவேறி வருகிறது. மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது.தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள், தற்போது உக்ரைனில் மருத்துவ படிப்பு படித்து வருகின்றனர். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் எதிரொலியாக, இவர்கள் பதுங்கு குழிகளிலும், மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் பரிதவித்து வருகின்றனர். ஒன்றிய, மாநில அரசுகள் இவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக உள்ளன. பலர் மீட்கப்பட்டும் வருகின்றனர். தற்போதைய சூழலில் தங்களது மருத்துவ படிப்பு, எதிர்காலம்  என்னாகும் என்பது பற்றிய கவலையில் மாணவர்கள் ஆழ்ந்துள்ளனர்.எனவே, ஒன்றிய அரசு தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அரசு மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கையையும், தற்போது செயல்பாட்டில் உள்ள கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை மேலும் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா காலக்கட்டங்களில் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பங்கு அளப்பரியது. தற்போதைய சூழலில் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் டாக்டர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. கொரோனா அடுத்தடுத்த அலைகள் உருவாகும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டு வரும் சூழலில், மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கட்டான சூழலில் வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவம் படிக்கும் நிலை  இனியாவது மாற வேண்டும். கட்டாயம் மாறும். மாறுமென்றே நம்புவோம்….

Related posts

முதல் எப்ஐஆர்

வெற்றிக்கோப்பை

மக்கள் குரலாக ஒலிக்கிறது