மாணவன் உடலை பெற பெற்றோருக்கு உத்தரவு பிணத்தை வைத்து அரசியல் செய்வது சமீபகாலமாக வாடிக்கையாகிவிட்டது: ஐகோர்ட் கிளை வேதனை

மதுரை: தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த ஆறுமுகம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் மகன் சீனி கடையநல்லூர் பள்ளியில் 7ம் வகுப்பு படித்தான். பட்டியல் இனம் என்பதால் என் மகனை சில ஆசிரியர்கள் வேண்டுமென்றே துன்புறுத்தியுள்ளனர். கடந்த 14ம் தேதி என் மகன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இதில், மர்மம் உள்ளது. அவசர கதியில் போலீசார் பிரேத பரிசோதனையை முடித்துள்ளனர். என் மகனின் உடலை மருத்துவ நிபுணர் குழுவினர் மறு பிரேத பரிசோதனை செய்யவும், வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றியும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி சத்திகுமார் சுகுமாரா குரூப் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ‘‘மாணவனின் உடல் மருத்துவ நிபுணர் குழு மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. முறையாக வழக்கு விசாரணை நடக்கிறது. உடலை வாங்க மறுப்பதால் தினசரி பல நூறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்’’ என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ‘‘சமீபகாலமாக பிணத்தை வைத்து அரசியல் செய்வது வாடிக்கையாகிவிட்டது. கள்ளக்குறிச்சி சம்பவம் இதற்கு உதாரணம். மாணவன் மரணம் குறித்து உரிய விசாரணை நடக்கிறது. எனவே, மாணவரின் உடலை அவரது பெற்றோர் அக். 20 (இன்று) 10 மணிக்குள் பெற்று இறுதி மரியாதை செய்ய வேண்டும். தவறினால், மாவட்ட நிர்வாகம் தரப்பில் மேல் நடவடிக்கை எடுக்கலாம். சம்பந்தப்பட்ட வழக்கை டிஎஸ்பி தலைமையில் விசாரிக்க தென்மண்டல ஐஜி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்….

Related posts

கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கல்லூரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: போலீசார் விசாரணை

திருப்போரூர், வல்லக்கோட்டை முருகன் கோயில்களில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு