மாஞ்சோலை வனப்பகுதியில் மெலிந்த தேகத்தோடு உலா வரும் காட்டு யானை:வனத்துறை கவனிக்குமா?

நெல்லை : மாஞ்சோலை வனப்பகுதியில் மெலிந்த தேகத்தோடு உலா வரும் 60 வயது யானையை மீட்டு, நல்ல முறையில் பராமரிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.நெல்லை மாவட்டத்தில் களக்காடு – முண்டந்துறை புலிகள் காப்பகம் 895 கிலோ மீட்டரில் விரிந்து பரந்து காணப்படுகிறது. பல்லுயிர் பெருக்கத்திற்கு பெயர் போன இந்த புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான் உள்ளிட்ட பல்வேறு விலங்கினங்கள் காணப்படுகின்றன. புலிகள் காப்பகத்தில் பல்வேறு விலங்கினங்கள் உலா வந்தாலும், புலிகளும், யானைகளும் மிக சிறப்பானதாக கருதப்படுகின்றன. வனத்தில் உலா வரும் யானைகளுக்கு போதிய தீவனங்களும், தண்ணீரும் இல்லாதபோது அவை மலையை விட்டு கீழிறங்கி வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன. சில மாதங்களுக்கு முன்பு தெற்கு கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் பகுதியில் சுற்றி திரிந்த ஒரு யானை உரிய உணவின்றி பரிதாபமாக இறந்தது. நலிவுற்ற அந்த பெண் யானையை கடைசி வரை வனத்துறை கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.இந்நிலையில் சமீபகாலமாக மாஞ்சோலை பகுதியிலும் உரிய உணவின்றி எலும்பும், தோலுமாக ஒரு பெண் யானை சுற்றித் திரிகிறது. அடிக்கடி பிளிறிக் கொண்டு ஓடும் இந்த யானையை உணவுக்காக அங்குமிங்கும் அலைந்து திரிகிறது. 60 வயது நிரம்பிய இந்த யானையை வனத்துறை அடையாளம் கண்டு உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.இதுகுறித்து வன ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘விலங்கின வகைகளில் யானைகள் அதிக காலம் (சுமார் 70 ஆண்டுகள்) உயிர் வாழும் தன்மை கொண்டது. மூங்கில், கரும்பு ஆகியவற்றை அதிகம் விரும்பி உண்ணும் யானைகள், காடுகளில் நாள் ஒன்றுக்கு 10 மணி நேரத்திற்கும் மேலாக உணவு சேகரிப்பில் ஈடுபடும். தினமும் 140 கிலோ முதல் 270 கிலோ வரை யானைகள் உணவு உட்கொள்ளும். வயதாகிவிட்டால் யானைகளுக்கு தடுமாற்றம் இயல்பாக வரும். அதிக தூரம் உணவு தேடி செல்ல முடியாது. மாஞ்சோலை பகுதியில் சுற்றி திரியும் யானையும் உணவு தேடி கிடைக்காமல் எலும்பும், தோலுமாக காட்சியளிக்கிறது. இதை காப்பாற்ற வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்….

Related posts

கட்டடக் கழிவுகளை கொட்டுவதை கண்காணிக்க குழு அமைத்தது சென்னை மாநகராட்சி : வாகனங்கள் பறிமுதல்; ரூ.79,000 அபராதம் வசூல்

ரூ.1.58 கோடி கட்டண பாக்கியை கேட்டு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர், மராட்டிய முதல்வருக்கு சுவிட்சர்லாந்து நாட்டு நிறுவனம் நோட்டீஸ்!!

கீழடி 10ம் கட்ட அகழாய்வில் சுடுமண் தொட்டி கண்டெடுப்பு