மாஜி மந்திரியை நம்பி ேமாசம் ேபான பெண் அதிகாரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘களி திங்கும் அதிகாரியை ஏன் மாஜி மந்திரி கண்டுகொள்ளவில்லை…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர்  மாவட்டத்தில் கடந்த இலை ஆட்சியில் கூட்டுறவு வங்கிகளில் அதிகாரிகளை மீறி  அப்போதைய தெர்மாகோல் மந்திரி ஆடிய ஆட்டங்கள் இப்போதுதான் ஒவ்வொன்றாக வந்து  கொண்டிருக்கிறது. ஏற்கனவே ‘‘வல’’மான ஊரை சேர்ந்த பெண்மணியை காண ரகசியமாக  அடிக்கடி விசிட் அடித்து வந்த அப்போதைய கூட்டுறவு தெர்மாகோல் மந்திரி  அடித்த லூட்டிகளும், மந்திரியை தனது மந்திரத்தால் கட்டிப்போட்ட மிதப்பில்  அதிகாரிகளை அலறவிட்ட அம்மணி பற்றி அப்போதே பரபரப்பு எழுந்தது. மேலும் இந்த துறையில் தான் வைத்தது தான் சட்டம் என்று ஓவராக விளையாடினாராம். அதில் பெரும்பகுதியை தான் சுருட்டிவிட்டு சிறு பகுதியை மாஜிக்கு காணிக்கையாக செலுத்தி வந்தாராம். அவர்களுக்குள் வேறு கணக்கு இருந்ததால், தெர்மோகோலும் கண்டுக்கொள்ளவில்லையாம். இப்போது  மகளிர் குழுக்களுக்கு லோன் கொடுத்த வகையில் ₹1 கோடி வரை ஆட்டைய போட்டு  சிறையில் இப்போது களி தின்னும் சிவனின் மனைவி பேரை கொண்ட அம்மணி அதிகாரியை  மாஜி தெர்மாகோல் மந்திரி இப்போது கண்டுக்காம விட்டதற்கான ரகசியம் என்ன  என்பதுதான் கூட்டுறவுத்துறையில் இப்போது ‘‘லகலக’’ பேச்சாம். அதோடு  பிடிபட்ட அம்மணி குறித்து தகவல் அறிந்து மாஜி தெர்மாகோல் மந்திரியும்  அச்சத்தில் உறைந்துள்ளாராம். அதற்கேற்ப வலமான ஊரை சேர்ந்த அம்மணிக்கும்,  பிடிபட்ட அதிகாரி அம்மணிக்கும் உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை  தொடங்கியிருக்காம் ்என்கிறார்கள் காக்கிகள்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘தூங்கா நகர மாவட்டத்தில் ஒன்றிய அரசின் விதியை யார் எத்துக்கிட்டாங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘மதுரை பல்கலைக்கழகம் பழமை வாய்ந்தது. முழுக்க, முழுக்க தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இப்பல்கலைக்கழகத்தில் கடந்த 2017ம் ஆண்டு, முதுகலை உயிரி தொழில்நுட்பவியல் படிப்பு துவக்கப்பட்டது. இப்பிரிவில் 30 மாணவர்கள் சேர்க்கை உள்ளது. இவ்வாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு தமிழகத்தை தவிர வெளிமாநிலங்களிலும், அறிவிப்பு வெளியிடப்பட்டு, இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பாடப்பிரிவில், மாணவர் சேர்க்கையில், தமிழக அரசின் இடஒதுக்கீடு முறையை நடைமுறைப்படுத்தாமல், ஒன்றிய அரசின் பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கான இட ஒதுக்கீடும் சேர்க்கப்பட்டிருக்கிறதாம். இதன்மூலம், தமிழக மாணவர்கள் குறைந்தது 5 பேர் மட்டுமே பயன்பெற முடியுமாம். மற்ற இடங்கள் அனைத்திலும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களே சேர அதிக வாய்ப்பு உள்ளது. தற்போதுள்ள பல்கலைக்கழக துணைவேந்தர், ஆளுநரின் சிபாரிசு மூலம் பதவிக்கு வந்தவராம். தங்களுக்கு சாதகமானவர்கள் மூலம் ஒன்றிய அரசு தனது திட்டத்தை நிறைவேற்ற துடிப்பதாகவும், மதுரை பல்கலைக்கழக துணைவேந்தர் சத்தமில்லாமல் அந்த வேலையில் ஈடுபட்டிருப்பதாகவும் இங்கு பணியாற்றும் துறைத்தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.ஏற்கனவே சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒன்றிய அரசின் பொருளாதார நலிவுற்றோர் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்திய போது பிரச்னை எழுந்து, கடைசி நேரத்தில், அந்த அறிவிப்பை அப்போது பாஜகவுக்கு ஆதரவாக இருந்த துணைவேந்தர் ரத்து செய்தார். தற்போது மதுரை பல்கலைக்கழகத்தில், இந்த இடஒதுக்கீடு முறை ரகசியமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஆளுநரின் ஆசீர்வாதத்தோடு, துணைவேந்தர் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தியுள்ளார். இந்த இடஒதுக்கீடு பிரச்னை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. படிப்புக்கான உள்கட்டமைப்பு வசதி, நிதி அனைத்தும் தமிழக அரசு தரும்போது, ஒன்றிய அரசின் இடஒதுக்கீடு முறை எதற்காக அமல்படுத்த வேண்டும் என கல்வியாளர்கள் மத்தியில் கேள்வி எழுந்து கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார் விக்கியானந்தா.‘‘ஆவின்ல ஊழலா… விளக்கமாக சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘விழுப்புரம், கல்லை மாவட்டத்தை உள்ளடக்கிய ஆவின் நிறுவனத்தில் கடந்த இலை ஆட்சியில் பல கோடி ஊழல் நடந்திருக்கிறதாம். அதிலும், மார்க்கெட்டிங் பிரிவில் உள்ள அதிகாரி கடந்த 7 ஆண்டுகளாக கடைகள் வைப்பதற்கு அனுமதி வழங்கியது, ஆவின் பொருட்கள் விற்பனை செய்ததில் முறைகேடு என ரூ. 3 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்ததாம். ஆனால் அவரோ, இலை ஆட்சியில் நியமிக்கப்பட்ட நிர்வாக குழு மீது குற்றச்சாட்டுகளை கூறி எஸ்கேப் ஆகி வந்தாராம். நிர்வாகக் குழுவோ அதிகாரி மீது என இப்படி மாறி மாறி குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தார்களாம். இந்த நிலையில் ஊழல் புகார்கள் குறித்து தற்போதைய ஆட்சியில் அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் பெட்டிஷன் பறக்கிறதாம். விற்பனை பிரிவு அதிகாரியோ எதை பற்றியும் கவலைப்படாமல் உள்ளாராம். ஏனென்றால் சமீபத்தில் நியமிக்கப்பட்ட பொது மேலாளர் மீது எல்லா ஊழல் புகாரையும் சுமத்தி, அவரது ஆதரவாளர்களை வைத்து பெட்டிஷன் போட்டுள்ளாராம். இலை ஆட்சியில் நடந்த ஊழல்களை மறைக்க பல வகையில் முயற்சித்து வருகிறார்களாம். ஆவின் தலைமை வரை இவ்விவகாரம் பூதாகரமாக வெடிக்க கூண்டோடு இடமாற்றத்திற்கு முடிவு செய்திருக்கிறார்களாம். விற்பனை அதிகாரி மீதான நடவடிக்கை, இலை ஆட்சியில் இல்லை. இந்த ஆட்சியிலாவது இருக்குமா என்று எதிர்பார்த்து இருக்கிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா….

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கரன்சி இல்லாமலும் கூட்டணி ஆதரவு இல்லாமலும் கலங்கிக் கிடக்கும் வேட்பாளரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கட்சி கண்டுகொள்ளாததால் அதிருப்தி கோஷ்டியிடம் ஐக்கியமான இலை பிரமுகரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா