மாஜி மகளிர் அணி செயலாளருக்கு கொலை மிரட்டல் அதிமுக எம்எல்ஏ மீதான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி மனு

மதுரை: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே ரைட்டான்பட்டியைச் சேர்ந்த ரீட்டா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: அதிமுகவில் நகர மகளிரணி இணைச் செயலாளராக இருந்தேன். கடந்த 2021ல் திருவில்லிபுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தற்போதைய எம்எல்ஏ மான்ராஜ்க்காக தேர்தல் பணியாற்றினேன். அப்போது இன்னாசியம்மாள் என்பவர் தேர்தலுக்கு செலவிட்ட ரூ.1 லட்சத்தை எம்எல்ஏவிடம் இருந்து பெற்றுத் தருவதாக கூறினார். தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனபிறகு அந்த பணத்தை தராமல் இழுத்தடித்தார். இதனால், எம்எல்ஏவின் மனைவியிடம் கேட்டேன். இதனிடையே எம்எல்ஏவும், இன்னாசியம்மாள் என்பவரும் பேசிய செல்போன் உரையாடல் சமூக வலைத்தளங்களில் வெளியானது. அதில், என்னை தொடர்புப்படுத்தி தவறாக பேசினர்.புகாரின்படி திருவில்லிபுத்தூர் போலீசார்பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவுகளில் எம்எல்ஏ உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் எம்எல்ஏ ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றார். இதன்பிறகு அடையாளம் தெரியாதவர்கள் என் வீட்டிற்கு வந்து எம்எல்ஏ மீதான புகாரை திரும்ப பெறாவிட்டால் கொலை செய்வதாக மிரட்டினர். கட்சியில் உள்ள பெண்களை, எம்எல்ஏ தொடர்ந்து பாலியல்ரீதியாக கட்டாயப்படுத்துகிறார். ஒத்துவராவிட்டால் தவறாக கூறி வருகிறார். அவரது தரப்பினர் ரூ.100 வெற்று பத்திரத்தில் என்னிடம் கையெழுத்து பெற்றனர். என் புகார் மீதான வழக்கில் போலீசார் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நிலுவையில் உள்ள என் புகார் மீதான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். எனக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது….

Related posts

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை