மாஜி கரன்ட் அமைச்சரை பார்த்து தலைதெறிக்க ஓடும் இலை கட்சியினரின் பின்னணி கதையை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கடிகாரத்தில் சின்ன முள் மேலிருந்து கீழ் வருவதும், கீழ் இருந்து மேலே போவது போல அரசியலில் நடக்கும் விளையாட்டில் சிக்குபவர்களின் நிலையும் அப்படிதான் போலிருக்கு… தற்போது அரசியல் களத்தில் இலை தரப்பில் எந்த முள் மேல் இருக்கிறது…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘தேனி மாவட்டத்தில் வசிக்கும் இலை கட்சியின் ‘பவர்’ சென்டரில் ஒருவரான துணையானவர் இருக்கிறார். தேனிக்கும் சேலத்துக்கும் நடக்கும் போட்டியில் சேலத்தின் கை ஓங்கியே இருக்கிறதாம். இதனால் சற்று அப்செட்டில்தான் துணையானவர் இருக்கிறார். சமீபத்திய அவரது பேச்சு கூட, நெருப்பின் நடுவில் சிக்கிக் கொண்டவர்களின் நிலையை எடுத்து காட்டாக கூறியிருந்தார். கரன்சியால் சேலம்காரர் பலரை தன் பக்கம் கட்டி இழுத்துவிட்டதால், தேனிக்காரர் பலம் இழந்து காணப்படுகிறாராம். சமீபத்தில் தன் துணைவி இறந்த நிகழ்வுக்கு திடீரென வந்த, ‘தோழி’, தேனிக்காரரின் கைகளை பிடித்து ஆறுதல் கூறியபோது, இவர் துக்கத்தை அடக்க முடியாமல், கண்ணீர் வடித்து தன் நன்றியை தெரிவித்தாராம். இது, சேலம்காரர் தரப்பை சந்தேக வளையத்தில் வைத்திருக்க வைத்துள்ளதாம். அப்புறம், ‘‘குக்கர் காரரும்’’ தனது பழைய தொகுதியின் ஊருக்கே நேரில் வந்து அஞ்சலி செலுத்திச் சென்றதுடன், அவரும் துணையானவரின் தோளில் சாய்ந்து ஆறுதல் கூறிச் சென்றதும், சுற்றி நின்ற கட்சியினரில் தேனிக்காரருக்கு தரப்புக்கு சந்தோஷமும், சேலம்காரர் தரப்பினருக்கு ஷாக் கொடுத்துள்ளதாம். ‘‘மாம்பழத்து ஊர் காரருக்கு’’ எச்சரிக்கை விடுவிக்கும் வகையில், ‘தோழி தரப்பினர்’ பலரிடமும் துணையானவர் நெருக்கம் காட்டி வருவதாக தொண்டர்கள் மத்தியில் பேச்சு ஓங்கி ஒலிக்கிறது. ‘‘மாம்பழத்து ஊர் காரருக்கு’’ கோடநாடு கணக்கு எழுதும் தீர்ப்பினைத் தொடர்ந்து முடிவெடுக்கும் நோக்கில் நாட்களை மெல்ல ‘‘துணையானவர்’’ நகர்த்தி வருவதாகவும் கட்சி மட்டத்தில் பேச்சு ஓடுது…’’ என்றார் விக்கியானந்தா. இப்போது தெரிந்து இருக்குமே, எந்த முள் இப்போது கடிகாரத்தில் மேல் இருக்கிறது என்று சொல்லி சிரித்தார் விக்கியானந்தா.‘‘மாஜி கரன்ட் மந்திரி என்ன தப்பு செய்துட்டாரு… கட்சிக்காரங்க அவரை பார்த்து ஏன் ஓடுறாங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ முட்டை மாவட்டத்தின் வெண்மையான ஊரில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட சொன்னால் இலை கட்சிக்காரங்க அலறியடித்து ஓடுறாங்களாம். இந்த மாவட்டத்தில் இலை கட்சியின் செயலாளராக இருக்கும் மாஜி கரண்ட் மந்திரிதான், எலக்‌ஷனில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்து தலைமையிடம் பட்டியல் கொடுப்பாராம். கடந்த எலக்‌ஷனில் தனக்கு வேண்டாத பலரை, அவர் நிராகரித்து விட்டாராம். அவர்கள் எல்லாம் மாஜி மீது கடும் அதிருப்தியில் இருக்காங்களாம். இந்நிலையில் காலியான உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடக்கப்போகுது. கடந்த தேர்தலில் வெண்மையான ஊரில் இருந்து மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு ஜெயித்தவர் முன்னாள் எம்.பி., இவர் அசெம்பிளி எலக்ஷனில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பதவியை ராஜினாமா செஞ்சாராம். ஆனால் இவர் மாஜிக்கு பணியாதவர் என்பதால் அவருக்கு சீட் கொடுக்கலையாம். அனால் இப்போ புதிய ஆட்சியின் சாதனைகள் மக்களிடம் பெரும் மலர்ச்சியை ஏற்படுத்தி இருக்கு. அவரும் தன்னை தாய் கழகத்தில் ஐக்கியப்படுத்திக் கொண்டார். இதனால் இலைக்கட்சி நிர்வாகிகள் பலரும் புதிய பதவிக்கு போட்டியிட தயங்குறாங்களாம். வாரி இறைக்க மாஜி ஆயத்தமா இருந்தாலும் உள்ளூர் நிர்வாகிகள் யாரும் களமிறங்க மாட்டோம் என்பதில் உறுதியா இருக்காங்களாம். இதனால் வெளியூர் ஆட்களை கோதாவில் இறக்கலாமா? என்று இரவு பகலாக யோசிக்கிறாராம் மாஜி. என்னடா இது வெண்மையான ஊருக்கு வந்த சோதனை என்று கேட்கிறாங்களாம் மூத்த நிர்வாகிகள். அதே சமயம் பசை உள்ள இலை பார்ட்டிகள் மாஜி கரன்ட் அமைச்சரை பார்த்ததும் ஷாக் அடித்ததுபோல தலைதெறிக்க ஓடுகிறார்களாம்…’’ என்றார் விக்கியனந்தா.‘‘வெயிலூர்ல மலை அடிவாரங்களை குறி வைத்து ஒரு கும்பல் ஆக்கிரமிப்பு செய்து வருதாமே, அப்டியா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மலையடிவாரப்பகுதிகள்ல ஆக்கிரமிப்புகள் தடையில்லாம நடக்குதாம். இதுல சமீபத்துல வள்ளலார் பகுதியில பல கோடி மதிப்பிலான அரசு இடங்களை ஆக்கிரமிச்சிருக்காங்க. உள்ளூர் பிரமுகருங்களே, அரசு இடத்தை கூறுபோட்டு பல லட்சங்களுக்கு விற்பனையும் செஞ்சிருக்காங்க. இந்த விஷயம் கடந்த சில நாட்களுக்கு முன்னாடித்தான், ஊர்முழுசும் தெரியவந்துச்சு. அதோட, ஆக்கிரமிப்புகளுக்கு வெயிலூர் துணை தாசில்தார் மின் இணைப்பு பெறுவதற்காக, தடையில்லா சான்றுகளை கொடுத்திருக்காங்க. இதுல கிராமத்தோட நிர்வாக அலுவலரோட சொந்தக்காரர் ஒருத்தருக்கும் ஆக்கிரமிப்பு ஏரியாவுல இடம் இருக்குதாம். ஆக்கிரமிப்புக்காரங்க, சம்திங் கொடுத்ததால எந்த ஆய்வும் செய்யாமலேயே ஆபிசர்ஸ் சர்டிபிகேட்டும் கொடுத்திருக்குறதாக பேசிக்கிறாங்க. வெயிலூர் சிட்டியில மட்டும் சைதாப்பேட்டை, காகிதப்பட்டறை, சத்துவாச்சாரி, வள்ளலார், பெருமுகைனு மலையோரப்பகுதிகளை ஏராளமானோர் ஆக்கிரமிச்சிருக்காங்களாம். அதில நூற்றுக்கும் மேற்பட்டவங்களுக்கு சம்திங் பெறப்பட்டதன் அடிப்படையில் சான்று கொடுத்திருக்குறதாக பேச்சு அடிபடுது. ஆக்கிரமிப்பு வெளிச்சத்துக்கு வந்த பின்னாடியும், இந்த தடையில்லாத சான்று வழங்குவது தொடர்கிறதாம். தடையில்லா சான்று மூலமாக அதிகாரிங்க நல்ல லாபம் பார்த்திட்டு வர்றாங்களாம்… இதுக்கு இடையில அதிகாரிங்க ஆய்வு செஞ்சிட்டு, 2 நாட்கள்ல ஆக்கிரமிப்புகளை அகற்றிடுவோம்னு சொன்னாங்க. ஆனா இன்னும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படலையாம், அதிகாரிங்க நடவடிக்கைைய கூர்ந்து பார்த்துகிட்டு வர்றதாக ஜனங்க பேசிக்கிறாங்க. பொறுத்திருந்து பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு…’’ என்றார் விக்கியானந்தா….

Related posts

நமுத்துப்போன போராட்டங்கள் நடத்தும் மாஜி மந்திரிகள் மீது கடுப்பில் இருக்கும் கட்சியினரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

நேரடியாக களத்தில் இறங்க சின்ன மம்மி எடுத்திருக்கும் முடிவு பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

பிரிந்தவர்களை இணைக்கும் முயற்சியில் துவண்டு போன மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா