மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் 169 புகார்களுக்கு ஒருவாரத்தில் தீர்வு

தர்மபுரி, மார்ச் 14: மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் நடப்பாண்டு 169 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 27.2.1982ம் ஆண்டு துவங்கப்பட்டது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் தொழிற்சாலைகளில் வெளியேற்றும் புகை, கழிவுநீர் ஆகியவை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், குறிப்பிட்ட தர நிர்ணயம் அளவீடு செய்யப்பட்டுள்ளது. இதை மாசுக்கட்டுப்பாடு பொறியாளர்கள் ஆய்வு செய்து சான்று அளிக்கின்றனர். சென்னையை தலைமையகமாக கொண்ட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு 8 மண்டல அலுவலகம், 38 மாவட்ட அலுவலகங்கள், 3 உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகங்கள் உள்ளன. மேலும் தொழிற்சாலைகளின் தரத்தை ஆய்வு செய்ய 8 ஆய்வகங்களும், 8 மேம்படுத்தப்பட்ட ஆய்கவங்கள் என 16 ஆய்வகங்கள் தமிழகம் முழுவதும் உள்ளன.  ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டத்தில், ஓசூரில் இயங்கி வந்த தர்மபுரி மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலகம், கடந்த 2016ம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்திற்கென தனியாக பிரிக்கப்பட்டு, தர்மபுரியில் செயல்பட்டு வந்தது. கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி முதல், தர்மபுரி பரிகால்பள்ளம் அருகே சொந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில், பால் உற்பத்தி பொருட்கள் தயாரிக்கும் கம்பெனிகள், சர்க்கரை ஆலைகள், நூற்பாலைகள், மாங்கூழ் ஆலைகள், பெட்ரோலிய சேமிப்பு கிடங்கு, கல்குவாரிகள், சேகோ பேக்டரிகள், பிளாஸ்டிக் மறுசுழற்சி உற்பத்தி ஆலைகள் என பெரியவகை, நடுத்தரம் மற்றும் சிறிய தொழிற்சாலைகள் 680 தொழிற்சாலைகள் உள்ளன. இதில் கழிவுநீரை வெளியேற்றும் தொழிற்சாலைகள், அவற்றை சுத்திகரித்து அந்த நீரை மறுசுழற்சிக்கு பயன்படுத்தவும், கிரஷர்கள் காற்று மாசு தடுப்பு சாதனங்களும், தொழிற்சாலைகள் சுற்றி மரக்கன்றுகள் வைக்கவும், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளால் அறிவுறுத்தப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் 2022 ஏப்ரல் முதல் மார்ச் 1ம் தேதி வரை தொழிற்சாலைகள் குறித்து, 169 புகார்கள் வரப்பெற்று அவற்றுக்கு ஒரு வார காலத்திற்குள் தீர்வு காணப்பட்டுள்ளது. இது குறித்து தர்மபுரி மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய கூடுதல் பொறுப்பு சுற்றுச்சூழல் பொறியாளர் சிவரஞ்சனி கூறியதாவது: தர்மபுரி மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலகம், கடந்த 2021ம் ஆண்டு முதல், சொந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் 680 தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் பால் உற்பத்தி பொருட்கள் தயாரிக்கும் கம்பெனிகள், சர்க்கரை ஆலைகள், நூற்பாலைகள், மாங்கூழ் ஆலைகள், பெட்ரோலிய சேமிப்பு கிடங்கு, கல்குவாரிகள், சேகோ பேக்டரிகள், பிளாஸ்டிக் மறுசுழற்சி உற்பத்தி ஆலைகள் உள்ளன. பொதுமக்களிடமிருந்து கழிவுநீர் வெளியேற்றுதல், குவாரிகளில் ஏற்படும் புகையால் காற்று மாசு என பல புகார்கள் வருகின்றன. கடந்த 2022 ஏப்ரல் முதல் இதுவரை 169 புகார்கள் வந்துள்ளன. இவற்றுக்கு ஒரு வார காலத்திற்குள், சம்பந்தப்பட்ட புகாருக்கு ஆளான தொழிற்சாலைக்கு, பொறியாளர்கள் நேரில் சென்று குறைக்கான தீர்வு குறித்து நடவடிக்கை எடுக்கிறோம். தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுநீரை சுத்திகரித்து, அதை மறுசுழற்சி செய்யவும், புகை வெளியேற்றுவதை உரிய கருவிகள் வைத்து மாசின் அளவை குறைக்கவும், சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகத்திடம் அறிவுறுத்துகிறோம். மருத்துவக்கழிவுகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகள் பற்றிய புகார்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

காராமணி விளைச்சல் குறைவு

வாராஹி அம்மன் கோயிலில் நவராத்திரி கொலு உற்சவம்

விடுதி பணியாளர் சங்க ஆலோசனை கூட்டம்